search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி கணக்கு
    X
    வங்கி கணக்கு

    கிசான் திட்டத்தில் போலியாக பதிவு செய்து பணம் பெற்ற வடமாநில தொழிலாளர்கள் தலைமறைவு

    வடமாநிலத்தை சேர்ந்த 1264 பேர் போலியாக பதிவு செய்து அவர்களது வங்கி கணக்குகளில் பணம் போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    சேலம்:

    பிரதமர் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு 3 தவணைகளாக ஆண்டுக்கு 6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தில் தமிழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பது அம்பலமானது. குறிப்பாக விவசாயிகள் அல்லாதோரை போலியாக இந்த திட்டத்தில் சேர்த்து அதிகாரிகள் மற்றும் புரோக்கர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்புடைய அதிகாரிகள், கணினி மைய உரிமையாளர்களை கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 18 ஆயிரம் பேரை போலியாக சேர்த்து ரூ.6 கோடி வரை முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் தற்போதுவரை ரூ.4 கோடி மீட்கப்பட்டு உள்ளது.

    இதுதொடர்பாக 52 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் பெத்தநாயக்கன்பாளையம் வட்டார உதவி வேளாண் அதிகாரி அன்பழகன், அவரது டிரைவர் பிரகாஷ் உள்பட 6 பேரை கைது செய்தனர். மேலும் இந்த திட்டத்தில் வடமாநிலத்தை சேர்ந்த 1264 பேர் போலியாக பதிவு செய்து அவர்களது வங்கி கணக்குகளில் பணம் போடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த வகையில் அவர்களுக்கு ரூ.25 லட்சம் அளிக்கப்பட்டு உள்ளது. அதனை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். ஆனால் முறைகேடாக பணம் பெற்ற வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தற்போது தலைமறைவாகிவிட்டனர். அவர்கள் தற்போது எங்கு உள்ளனர் என்பது குறித்து அவர்களது செல்போன் எண்களை வைத்து போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×