search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த போது எடுத்த படம்.
    X
    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த போது எடுத்த படம்.

    ரெயில்வே மேம்பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் போராட்டம்- 98 பேர் கைது

    ஆம்பூரில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டத்தில் ஈடுபட்ட 98 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஆம்பூர்:

    ஆம்பூர் ரெயில் பாதைக்கு மறுபுரம் ரெட்டிதோப்பு, பெத்லகேம், மாங்காதோப்பு, கம்பிக்கொல்லை, மாதனூர் ஒன்றியத்தின் நாயக்கனேரி மலை ஊராட்சி உள்ளிட்ட பகுதிகள் அமைந்துள்ளது. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதிகளுக்கு செல்ல 2 ரெயில்வே குகை வழிப்பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.

    மழை காலங்களில் மழை நீரும், மற்ற நாட்களில் கால்வாய் கழிவுநீரும் குகை வழிப்பாதையில் தேங்கியிருப்பதால் பொதுமக்கள் அவ்வழியை பயன்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டது.

    இப்பகுதியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டுமென சுமார் 40 ஆண்டு காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த மறைந்த அ.அஸ்லம் பாஷா ஆம்பூர் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். அதன்பேரில் ரூ.30 கோடியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார். மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டு அப்படியே நின்றுவிட்டது. இதுநாள் வரையிலும் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படவில்லை.

    அப்பகுதியில் நகராட்சி சார்பிலும் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. இதனால் ரெயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரி நேற்று ரெட்டித்தோப்பு பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 98 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதுசெய்யப்பட்டவர்களை ஆம்பூர் எம்.எல்.ஏ. வில்வநாதன் நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதுகுறித்து வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில், ஆம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் அப்பகுதி பொதுமக்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் ஆம்பூர் வில்வநாதன் எம்.எல்.ஏ., துணைபோலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், நகராட்சி ஆணையாளர் த. சவுந்தரராஜன், தி.மு.க. நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம், தாசில்தார் பத்மநாபன், இன்ஸ்பெக்டர் திருமால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் ரெயில்வே குகை வழிப்பாதையில் கழிவுநீர் தேங்காதவாறு கால்வாய் அமைத்து தருவதற்கும், ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
    Next Story
    ×