search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பல்லடம் அருகே கால்வாயில் மூழ்கிய தம்பதி- சிறுமி கதி என்ன?

    பிறந்த நாளை கொண்டாட சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கால்வாயில் மூழ்கிய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள புள்ளியப்பன் பாளையத்தை சேர்ந்தவர் அன்னபூரணி(வயது42). இவருக்கு தேவி(19), சரண்யா(12) என்ற மகள்கள் உள்ளனர். சரண்யா அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    தேவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அன்னூர் அடுத்த கோவில் பாளையத்தை சேர்ந்த சேதுபதி என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பு சேதுபதி தனது மனைவியுடன், மாமியார் வீட்டிலேயே தங்கி அங்குள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று தேவிக்கு பிறந்த நாள் என்பதால் குடும்பத்துடன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை அன்னபூரணி தனது மகள்கள் தேவி, சரண்யா, மருமகன் சேதுபதி ஆகியோருடன் பொங்கலூர் அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். மோட்டார் சைக்கிளை சேதுபதி ஓட்டினார்.

    அங்கு சாமி தரிசனம் முடித்து விட்டு 4 பேரும் மாலையில் வீட்டிற்கு திரும்பினர். காரப்பாளையம் பகுதியில் வந்த போது அங்குள்ள கிளை வாய்க்காலில் அதிகளவில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதை பார்த்த சேதுபதிக்கு கால்வாயில் இறங்கி குளிக்க வேண்டும் என தோன்றியது. இதையடுத்து உடனடியாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு குளிக்க செல்வதாக கூறினார்.

    இதை கேட்ட மாமியார் அன்னபூரணி, கோவிலுக்கு சென்று விட்டு குளிக்க கூடாது. வீட்டிற்கு கிளம்பலாம் வாருங்கள் என்றார். ஆனால் சேதுபதி கேட்காமல் தனது மனைவி, தேவியையும், அவரது தங்கை சரண்யாவையும் அழைத்து கொண்டு கால்வாய்க்கு சென்றார்.

    முதலில் சேதுபதி கால்வாயில் இறங்கி குளித்து கொண்டிருந்தார். தேவியும், சரண்யாவும் படித்துறையில் நின்று தண்ணீரில் விளையாடி கொண்டிருந்தனர். மாமியார் அன்னபூரணி துணிகளை பார்த்து கொண்டு வண்டியின் அருகில் நின்றிருந்தார்.

    இந்த நிலையில் சிறிது நேரத்தில் கால்வாயில் தண்ணீர் வரத்து அதிகரிக்கவே குளித்து கொண்டிருந்த சேதுபதி தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். இதனால் அதிர்ச்சியான அவர் அய்யோ... அம்மா... என்னை காப்பாற்றுங்கள் என்று சத்தம் எழுப்பினார்.

    இதை பார்த்த தேவியும், சரண்யாவும் கைகொடுத்து அவரை மீட்க முயற்சித்தனர். ஆனால் எதிர்பாரத விதமாக அவர்களும் கால்வாயில் தவறிவிழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர். இதனை வண்டியின் அருகே நின்று பார்த்து கொண்டிருந்த அன்னபூரணி மயங்கி கீழே விழுந்தார்.

    அப்போது அந்த வழியாக வந்த சிலர் பார்த்து சம்பவம் குறித்து காமநாயக்கன் பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் பல்லடம் தீயணைப்பு படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் கால்வாயில் இறங்கி தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடினர்.

    நீண்ட நேரமாகியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதற்கிடையே இரவு நேரமாகி விட்டதாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் தேடும் பணியை தீயணைப்பு படையினர் கைவிட்டனர். இதனால் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களின் கதி என்ன? என்பது தெரியவில்லை.

    இன்று காலை 2-வது நாளாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட 3 பேரையும் தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

    பிறந்த நாளை கொண்டாட சென்ற இடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கால்வாயில் மூழ்கிய சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×