search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்
    X
    வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்

    1 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை: மதுரையில் வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்

    மதுரையில் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்து சென்றன.
    மதுரை:

    மதுரையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக மாலை நேரம் மழை கொட்டியது. ஆனால் அதன் பிறகு வெயில் கொளுத்தியது. பகலில் 100 டிகிரிக்கு மேல் வெயில் அடித்ததால் பொதுமக்கள் தவிப்புக்குள்ளானார்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென கரும் மேகங்கள் ஒன்று திரண்டன. சுமார் 6.15 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடர்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது.

    மதுரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், தல்லாகுளம், திருப்பாலை, கோ.புதூர், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், ஒத்தக்கடை, எம்.ஜி.ஆர். பஸ் நிலையம், காளவாசல், அரசரடி, கோரிப்பாளையம், சூர்யாநகர், கடச்சனேந்தல் மற்றும் திருமங்கலம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருந்தது.

    இதனால் ரோட்டில் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. பெரியார் பஸ் நிலைய பகுதியில் ரோடுகளில் குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து சிறிது நேரம் முடங்கியது.

    இதே போல் மதுரையின் பிரதான ரோடுகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் தத்தளித்துச் சென்றன.

    கடச்சனேந்தலில் இருந்து ஒத்தக்கடை செல்லும் ரோடு ஜங்சன் பகுதியில் மழைநீருடன் சாக்கடை தண்ணீரும் கலந்து அழகர் கோவில் மெயின் ரோட்டில் வெள்ளமாக சீறி பாய்ந்தது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளானார்கள்.

    பெரியார் பஸ் நிலையம் அருகே பாண்டி பஜார் பகுதியில் ஒரு கடையின் வெளிப்புற மேற்கூரை மழைக்கு இடிந்து விழுந்தது. இதில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் மின் வயர்கள் அறுந்து விழுந்ததால் அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    மாலை 6 மணிக்கு மேல் பலத்த மழை பெய்ததால் வேலைக்கு சென்றவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வீடு திரும்ப முடியாமல் அவதிக்குள்ளானார்கள்.

    இந்த மழையால் கடந்த 3 நாட்களாக மதுரையில் நிலவி வந்த வெப்பம் குறைந்து குளிச்சியான சூழ்நிலை நிலவியது.

    மேலூர் பகுதியிலும் சுமார் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் ரோடுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலூர் ஒருபோக சாகுபடி பகுதிகளுக்கு கடந்த 27-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதையடுத்து நாற்று நடவும் பணிகள் முடிவடைந்தன.

    10 நாட்களுக்கு பிறகு மழை பெய்துள்ளதால் உழவு பணிகள் தொடங்குவதற்கு மிகவும் உதவியாக உள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×