search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    மதுரையில் 21 சதவீதம் பேர் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனர்- ஆய்வில் தகவல்

    மதுரையில் சமூக இடை வெளியை பொறுத்த வரையில் விழிப்புணர்வு சற்று குறைவாக உள்ளது. 21 சதவீதம் பேர் மட்டுமே 6 அடி இடைவெளி என்பதை பின்பற்றுகின்றனர் என்று ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

    மதுரை:

    மதுரை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மை செயலாளருமான பி.சந்திர மோகன் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முககவசம் அணிவது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது, சமூக இடைவெளி பின்பற்றுவது என்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது .

    பொதுமக்களிடம் எந்த அளவுக்கு இது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறித்து கள ஆய்வு மேற் கொள்ளப்பட்டது.

    மதுரை சமூக அறிவியல் கல்லூரி மாணவர்கள் உதவியுடன், மாநகராட்சி 100 வார்டுகளிலும் ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 30 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக பிரித்து ஆய்வு செய்யப்பட்டது. ஒவ்வொரு வார்டிலும் சராசரியாக 21 பேரிடம் இது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதன் அடிப்படையில் ஒட்டு மொத்தமாக வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது முககவசம் அணிவதாக 68.6 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

    பொது இடங்களில் அவ்வப்போது முககவசம் அணிவதாக 27.4 சதவீதம் பேரும், எப்போதாவது மட்டுமே அணிவதாக 4 சதவீதமாக பேரும் தெரிவித்துள்ளனர்.

    இதே போல கை கழுவும் பழக்கம் 67.2 சதவீதம் பேரிடம் உள்ளது. 27.1 சதவீதம் பேர் அவ்வப்போதும், 5.6 சதவீதம் பேர் அரிதாகவும் கை கழுவும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

    மதுரையில் சமூக இடை வெளியை பொறுத்த வரையில் விழிப்புணர்வு சற்று குறைவாக உள்ளது. 21 சதவீதம் பேர் மட்டுமே 6 அடி இடைவெளி என்பதை பின்பற்றுகின்றனர். கூட்டமான இடங்களை 10.8 சதவீதம் பேர் மட்டுமே தவிர்க்கின்றனர்.

    முககவசம் அணிவது, கை கழுவுவது, சமூக இடை வெளியை பின்பற்றுவது ஆகியன குறித்து இன்னும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. அதுவும் முககவசம் அணிவது, கை கழுவுவது ஆகியவற்றில் ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டிருந்தாலும், சமூக இடைவெளி வி‌ஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியமானது. கொரோனா தொற்று பரவல் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

    மதுரை மாவட்டத்தை பொறுத்தவரை முழு பொது முடக்கம் அமலில் இருந்த காலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக இருந்தது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு பரவல் அதிகரிக்கும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா கட்டுக்குள் இருக்கிறது.

    இதை இன்னும் குறைக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் முக கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது ஆகியவற்றில் கண்டிப்பாக கடைபிடிப்பது அவசியமாகும். இதை அடிப்படையாக கொண்டு தடுப்பு நடவடிக்கைக்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×