search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசார தொழில் நடைபெற்ற கட்டிடத்தை படத்தில் காணலாம்.
    X
    திருச்சியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசார தொழில் நடைபெற்ற கட்டிடத்தை படத்தில் காணலாம்.

    திருச்சி மசாஜ் சென்டர்களில் அழகிகளை வைத்து விபசாரம் - 10 இளம்பெண்கள் மீட்பு - 5 பேர் கைது

    திருச்சியில் மசாஜ் சென்டர்களில் அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். 10 பெண்கள் மீட்கப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி மாநகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் மசாஜ் சென்டர்களை நடத்தி அழகிகளை வைத்து விபசாரத்தில் ஈடுபடுத்தி வருவதாக மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், மசாஜ் சென்டர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அருள்ஜோதி, மீராபாய் மற்றும் போலீசார் ஸ்பா மையம் இயங்கும் இடங்களை கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் திருச்சி கருமண்டபத்தில் தர்ஷினி ஆயுர்வேதிக் கேர் ஸ்பா என்ற பெயரிலும், பொன்னகரில் ஆரஞ்ச் ஸ்பா என்ற பெயரில் இயங்கி வந்த மசாஜ் சென்டர்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது கருமண்டபம் ஸ்பா மையத்தில் பெங்களூர், கிருஷ்ணகிரி மற்றும் புதுச்சேரி ஜீவானந்தபுரத்தை சேர்ந்த 24 வயதுடைய 3 இளம்பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து விபசார தொழிலுக்கு உடந்தையாக இருந்த தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த கண்மணி முருகன் (வயது 36) என்பவரை போலீசார் கைது செய்தனர். 3 இளம்பெண்களும் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    இதுபோல பொன்னநகரில் உள்ள ஸ்பா மையத்தில் இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக திருச்சி பெரியகடை வீதியை சேர்ந்த தர்மேந்திரா (30) என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கு விபசாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த 28 வயது இளம்பெண், கரூர் சின்னக்கல்பட்டியை சேர்ந்த 22 வயது இளம்பெண், ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த 30 வயது இளம்பெண், தென்காசி அரவாக்காடு பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஆகியோர் மீட்கப்பட்டனர்.

    திருச்சி வில்லியம்ஸ் சாலையில் திவ்யம் ஸ்பா என்ற பெயரில் நடந்த மசாஜ் சென்டரில் விபசாரத்தில் ஈடுபட்ட கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 23 வயது இளம் பெண் மீட்கப்பட்டார். விபசார தொழிலுக்கு உடந்தையாக இருந்த திருவெறும்பூர் பகவதிபுரத்தை சேர்ந்த பிரவீன் (26), லால்குடியை சேர்ந்த அஜீத் (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ஸ்பா சென்டர் உரிமையாளரான முகமது முஸ்தபா தலைமறைவானார். அவரை போலீசார் தேடிவருகிறார்கள்.

    திருச்சி கே.கே.நகர் ஜெயா காலனியில் உள்ள ஸ்பா மையத்தில் விபசாரத்தில் ஈடுபட்ட திருச்சி தில்லைநகரை சேர்ந்த 27 வயது இளம் பெண், ஜெயாநகரை சேர்ந்த 28 வயது இளம் பெண் ஆகியோர் மீட்கப்பட்டனர். விபசாரத்திற்கு உடந்தையாக இருந்த திருச்சி பெரியமிளகுபாறையை சேர்ந்த கோபிநாத் (23) கைது செய்யப்பட்டார்.

    இது தொடர்பாக விபசார தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைதான 5 பேரும், திருச்சியில் கட்டிடங்களை வாடகைக்கு எடுத்து ஸ்பா என்ற பெயரில் மசாஜ் சென்டரை அனுமதி பெறாமல் போலியாக நடத்தி வந்தது தெரியவந்தது.

    மேலும் மீட்கப்பட்ட 10 இளம்பெண்களும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி விபசாரத்தில் தள்ளப்பட்டதும் தெரியவந்தது. மீட்கப்பட்ட 10 இளம்பெண்களும் அரசு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர். திருச்சி மாநகரில் சட்டத்திற்கு புறம்பாக இதுபோன்ற மசாஜ் சென்டர்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் கமிஷனர் லோகநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    Next Story
    ×