search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

    திருப்பத்தூர் அருகே ஹத்ராஸ் சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திருப்பத்தூர்:

    உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராசில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவத்தை கண்டித்து திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பஸ் நிலையம் ராஜீவ் காந்தி சிலை அருகே தர்ணா போராட்டம் நடந்தது. தொகுதி பொறுப்பாளர் இ.பரத், தலைமை தாங்கினார். போராட்டத்தில் முன்னாள் நகர தலைவர் வெங்கடேசன், ஒன்றிய தலைவர் மணி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எம்.பி. கணேஷ், மகேந்திரன், வினோத், குமரேசன், ஜெகநாதன், சுகுமார் உட்பட பலர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

    அனுமதியின்றி தர்ணா நடந்ததால் அதில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது தரையில் அமர்ந்து கொண்டு எதிர்த்தவர்களை போலீசார் இழுத்துச்செனறு கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் திருப்பத்தூர் சி.எஸ்.ஐ. பள்ளி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி தலைவர் கவிதா தலைமை தாங்கினார், கற்பகவல்லி வரவேற்றார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் ந.சுப்புலட்சுமி, கே.கே.சி.கமலாம்பாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர், ஆர்ப்பாட்டத்தை மாவட்ட பொருளாளர் அகிலா எழிலரசன் தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன், மாவட்ட செயலாளர் வி.ஜி,.இளங்கோ, மாவட்ட துணை செயலாளர் எம்.கே.எஸ்.இளங்கோவன், மாநில இளைஞரணி அமைப்பாளர் சி இ.சிற்றரசு .உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் வெண்ணிலா நன்றி கூறினார்.

    ஆம்பூர் பஸ் நிலையம் அம்பேத்கர் சிலை முன்பு சத்தியாகிரக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மாவட்ட தலைவர் பிரபு, நகர தலைவர் சரவணன், மின்னூர் சங்கர், பேரணாம்பட்டு ஒன்றியத் தலைவர் சங்கர், சிரி பிரபு, விஜயன் உள்பட 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பேரணாம்பட்டில் பஸ் நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை முன்பு நகர காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் சுரேஷ்குமார் தலைமையில் தரையில் அமர்ந்து சத்தியாகிரக போராட்டம் நடத்தினர். தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சுரேஷ் குமார், மாநில மகளிர் காங்கிரஸ் துணை தலைவர் கிருஷ்ணவேணி, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பெரிய தம்பி, உவைஸ் அஹம்மத், கோவிந்தசாமி, ராஜேந்திரன், சிவகாமி உள்ளிட்ட 16 பேரை பேரை கைது செய்தனர்.

    வாணியம்பாடியில் உள்ள ராஜீவ்காந்தி, காமராஜர், காந்தி, இந்திரா காந்தி, அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் உள்ள இடங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்த அனுமதி கோரி வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் நகர காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர் பைசல் அமீன் மனு அளித்திருந்தார். ஆனால் போராட்டத்துக்கு அனுமதியளிக்கப்படவில்லை.

    இந்த நிலையில் தடையை மீறி நேற்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் அஸ்லம்பாஷா தலைமையில் பஸ் நிலையத்தில் உள்ள இந்திரா காந்தி சிலை முன்பு 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    குடியாத்தம் நெல்லூர்பேட்டை காந்தி சிலை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் எஸ்.எம்.தேவராஜ் தலைமை தாங்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதேபோல் குடியாத்தம் கொண்டசமுத்திரம் அம்பேத்கர் சிலை அருகே நடைபெற போராட்டத்திற்க்கு ஒன்றிய தலைவர் வீராங்கன் தலைமை தாங்கினார். போராட்டத்தில் கலந்து கொண்ட 5 பேரை போலீசார் செய்தனர்.

    திருவலத்தை அடுத்த மேல்பாடி அருகே உள்ள கோட்டநத்தத்தில், காட்பாடி தொகுதி முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் தினா என்ற தினகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரை மேல்பாடி போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×