search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐஐடி சென்னை
    X
    ஐஐடி சென்னை

    ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் சென்னை மண்டலம் சாதனை

    நாடு முழுவதும் ஜெ.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு எழுதிய 1,50,838 மாணவர்களில் 43,204 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஜே.இ.இ. நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. முதன்மை தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என 2 கட்டங்களாக தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களே இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர முடியும். அவ்வகையில் கடந்த மாதம் நடைபெற்ற ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. 

    மொத்தம் 1,50,838 மாணவர்கள் அட்வான்ஸ்டு தேர்வு எழுதிய நிலையில், 43,204 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 6707 பேர் பெண்கள். ஐஐடி பாம்பே மண்டலத்தின் சிராக் பாலர், பொது தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். அவர் 396 மதிப்பெண்களுக்கு 352 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 

    பெண்களில் ரூர்கீ மண்டலத்தைச் சேர்ந்த கனிஷ்கா மிட்டல் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய தரவரிசையில் 17வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 315 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

    தேர்ச்சி பெற்ற முதல் 22 தேர்வர்களில் சென்னை மண்டலத்தில் இருந்து மட்டும் 5 பேர் இடம்பெற்றுள்ளனர். பொது பிரிவில் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த கங்குலா புவன் ரெட்டி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவிலும் இவர் முதலிடம் பெற்றுள்ளார். 

    ஓபிசி/என்சிஎல் பிரிவில் லிண்டா ஜிதேந்திரா, மாற்றுத் திறனாளிகளுக்கான பொதுப்பிரிவில் கந்துகுரி சுனில்குமார் விஷ்வேஷ் ஆகியோர் முதலிடத்தைப் பிடித்தனர். கந்துகுரி சுனில்குமார் விஷ்வேஷ், பொருளாதார ரீதியாக பின்தங்கிய, மாற்றுத்திறனாளி பொதுப்பிரிவிலும் முதலிடத்தை பிடித்தார். சென்னை மண்டலத்தில் தேர்ச்சி பெற்ற பெண்களில் கோத்தபள்ளி நமிதா முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் அகில இந்திய தரவரிசையில் 44வது இடத்தில் உள்ளார்.

    அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களில் முதல் 500 பேர் மும்பை, டெல்லி, கவுகாத்தி, கான்பூர், காரக்பூர், சென்னை, ரூர்கீ மண்டலங்களைச் சேர்ந்தவர்கள். இதிலும் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த மாணவர்களே அதிகம். முதல் 100 பேரில் 28 பேரும், முதல் 500 பேரில் 140 பேரும் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×