search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் சம்மன் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகள் அல்லாதவர்கள் 2 லட்சம் பேர் வரை முறைகேடாக சேர்க்கப்பட்டு நிதி உதவி பெற்றது தெரியவந்தது. இதுதொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் உதவி இயக்குனர்கள் 2 பேர் மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர்கள் 18 பேர் ஆக மொத்தம் 20 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

    மேலும் போலி விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தொகையை வங்கிகள் மூலம் திரும்ப பெறும் நடவடிக்கையில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இது ஒருபுறம் இருக்க முறைகேட்டில் ஈடுபட்ட வேளாண் அலுவலர்கள், ஒப்பந்த ஊழியர்கள், இடைத்தரகர்கள் யார், யார்? என கண்டறிந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஏற்கனவே இந்த முறைகேடு தொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்நிலையில் ரிஷிவந்தியம் வட்டார வேளாண் அலுவலகத்தில் உதவி தொழில்நுட்ப மேலாளராக பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியரான சின்னசேலம் தாலுகா நயினார்பாளையத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி (வயது 34) என்பவர் இந்த முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மடக்கிப்பிடித்தனர்.

    இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரும் அதே வட்டாரத்தில் தொழில்நுட்ப மேலாளராக பணியாற்றி வந்த சக்திவேல் என்பவரும் சேர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் மட்டுமின்றி விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து பயனீட்டாளர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்து ரகசியமாக பெற்று அதன்மூலம் மேற்கண்ட 4 மாவட்டங்களிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி அல்லாத நபர்களை இத்திட்டத்தில் முறைகேடாக சேர்த்ததும், இதற்காக அவர்கள் இருவரும், ஒவ்வொரு நபரிடம் இருந்தும் ரூ.300லிருந்து ரூ.500 வரை பெற்றிருப்பதும் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து ராஜீவ் காந்தியை போலீசார் கைது செய்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விழுப்புரம் வேடம்பட்டில் உள்ள மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த முறைகேடு தொடர்பாக தலைமறைவாக இருக்கும் சக்திவேல் உள்ளிட்ட சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
    Next Story
    ×