search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று ஏற்படாமல் தப்பிக்க முக கவசத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்?

    கொரோனா தொற்று ஏற்படாமல் தப்பிக்க முக கவசத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    சென்னை:

    கொரோனா தொற்று ஏற்படாமல் தப்பிக்க முக கவசத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    தமிழகத்தில் மற்ற மாநிலங்களை காட்டிலும் கொரோனா பாதிப்பு 10 சதவீதத்துக்கும் குறைவாகவே இருந்து வருகிறது. சென்னையில் கொரோனா பாதிப்பை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுப்பிடிக்கும் வரையில் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இந்தநிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர் மண்டலத்தில் கடைகள், வணிக வளாகங்களுக்கு வரும் பொது மக்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்து நேரடியாக சென்று எடுத்துரைத்து, துண்டு பிரசுரம் வழங்கி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதையடுத்து முககவசத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என பொது மக்களிடம் அவர் கூறியதாவது:-

    * வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும்.

    * முக கவசத்தினை மூக்கு, வாய் ஆகிய பகுதிகள் முழுமையாக மூடும் வண்ணம் அணிய வேண்டும்.

    * பொது இடங்களான பஸ் நிலையம், ரெயில் நிலையம், அரசு அலுவலகங்கள், மருத்துவமனை, காய்கறி சந்தை, வழிப்பாட்டு தலங்கள், பல்பொருள் அங்காடி, துணிக்கடைகள் போன்ற இடங்களில் முக கவசம் அணிவதுடன் 2 மீட்டர் அளவில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

    * முக கவசத்தின் முன்பகுதியை அடிக்கடி கைகளால் தொடுவதை தவிர்ப்பதுடன் கட்டாயம் பின்புறத்தில் இருந்து அகற்ற வேண்டும். பயன்படுத்திய முக கவசத்தினை கிருமி நீக்கம் செய்து முறையாக பயன்படுத்த வேண்டும்.

    * பயன்படுத்திய முக கவசத்தினை பொது இடங்களில் சாதாரண குப்பைகளுடன் கலந்து அப்புறப்படுத்தக் கூடாது.

    * ஒருவர் பயன்படுத்திய முக கவசத்தை மற்றொருவர் பயன்படுத்த கூடாது. குடும்பத்தை சேர்ந்த அனைவரும் தனித்தனியாக முக கவசத்தினை பயன்படுத்த வேண்டும்.

    * முக கவசம் அணிந்திருக்கும் போது தும்மலோ, இருமலோ ஏற்பட்டு நனைந்து விட்டால் அந்த முககவசத்தினை அகற்றிவிட்டு புதிய ஒன்றை அணிய வேண்டும்.

    * துணியால் ஆன முக கவசத்தை ஒவ்வொரு முறை பயன்பாட்டிற்கு பிறகும் நன்றாக துவைத்த பின்னரே மீண்டும் பயன்படுத்த வேண்டும்.

    * துவைக்காமல் முக கவசத்தை அடுத்த முறை பயன்படுத்த கூடாது.

    * முக கவசம் அகற்றப்பட்ட உடன் கைகளை கிருமி நாசினி அல்லது சோப்பு போட்டு நன்றாக சுத்தப்படுத்த வேண்டும்.

    * முக கவசத்தினை அணியாமல் வெளியே வரும் நபர்களுக்கு கொரோனா தொற்று வருவதற்கும், மற்றவர்களுக்கு பரவுவதற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடினால் தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை சட்டம் 1939-ன் படி ரூ.200 அபராதமும், பொது இடங்களில் துப்பினால் ரூ.500 அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறினால் ரூ.500 அபராதமும் வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விழிப்புணர்வின் போது துணை கமிஷனர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர்.
    Next Story
    ×