search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கில் வாலிபர் கைது

    நாங்குநேரி இரட்டைக்கொலை வழக்கில் 3 பேர் சரண் அடைந்த நிலையில் மேலும் ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    நெல்லை:

    நாங்குநேரியை அடுத்த மறுகால் குறிச்சியை சேர்ந்த சண்முகத்தாய், சாந்தி ஆகியோர் கடந்த 26-ந்தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.

    இந்த கொலை வழக்கை நாங்குநேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். காதல் திருமணத்தால் ஏற்பட்ட விரோதத்தில் இந்த இரட்டைக்கொலை நடைபெற்றது விசாரணையில் தெரியவந்தது.

    இது தொடர்பாக 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீலிசா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் கொலையாளிகளை தேடி வந்தனர். நேற்று இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த கண்ணன் (வயது35), சொரிமுத்து (67), மறுகால்குறிச்சியை சேர்ந்த முருகன் (42) ஆகிய 3 பேரும் திருச்சி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் எண்-1 ல் சரண் அடைந்தனர். அவர்களை வருகிற 6-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    இதையடுத்து 3 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதற்கிடையே தூத்துக்குடி, நெல்லை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று கொலையாளிகளை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். நேற்றிரவு கொலை வழக்கில் தொடர்புடைய தூத்துக்குடியை சேர்ந்த முத்துபாண்டி(25) என்பவரை திருப்பூரில் போலீசார் கைது செய்தனர்.

    அவரை ரகசிய இடத்தில் வைத்து, மீதமுள்ள கொலையாளிகள் பதுங்கியுள்ள இடம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் மறுகால்குறிச்சியில் கொலை செய்யப்பட்ட 2 பெண்களின் வீடுகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்கொண்டு அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க நாங்குநேரி பகுதியில் போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர்.

    இந்த கொலையில் தேடப்படும் மற்ற கொலையாளிகளில் சிலர் கோர்ட்டில் சரண் அடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×