search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெண் பிள்ளைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும் - ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

    பெண் பிள்ளைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    சிறுமிகள், இளம் பெண்கள் வீட்டை விட்டு செல்லும் ஒரு வழக்கின்போது, பெண் பிள்ளைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செலவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவிகள் பலர் திருமணமானவர்களுடன் காதல் வயப்பட்டு வீட்டை விட்டு சென்று விடுவது தொடர்பான பல வழக்குகள், நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அதில் ஒரு வழக்கில் 10-ம் வகுப்பு படித்து வரும் 15 வயது மாணவி ஒருவர், திருமணமான 30 வயது வாலிபரை காதலித்து, அவருடன் சென்று விட்டதாக அந்த மாணவியின் தாயார் தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்தனர்.

    அப்போது, தனக்கு திருமணம் நடந்திருப்பதை மறைத்து அப்பாவி இளம்பெண்களை ஏமாற்றும் ஆண்களுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், அப்படிப்பட்ட ஆண்களை நம்பி செல்லும் மாணவிகளின் செயல்களுக்கு கடும் வேதனை தெரிவித்தனர்.

    இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “திருமணம் ஆன ஆண்களை காதலித்து, அவர்களுடன் செல்லும் இளம் பெண்கள் குறித்து கடந்த 10 ஆண்டுகளில் 53 ஆயிரத்து 898 புகார்கள் தமிழகம் முழுவதும் பெறப்பட்டு உள்ளது” என்று கூறப்பட்டு இருந்தது. இதை படித்து பார்த்த நீதிபதிகள், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளோடு நேரத்தை செலவிடுவது இல்லை. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகளுக்கு போதிய அன்பும், அரவணைப்பும் இல்லை. பிள்ளைகளோடு பெற்றோர் பேச வேண்டும். அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கண்டறிய வேண்டும். இதை செய்யாததால் தான், திருமணமான ஆண்களுடன் சிறுமிகள், இளம் பெண்களும் ஓடிச்செல்லும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன. இது மனவேதனை அளிக்கின்றன. எனவே, பிள்ளைகளுடன், குறிப்பாக பெண் பிள்ளைகளுடன் பெற்றோர் அதிக நேரம் செலவிட வேண்டும்” என்று கருத்து தெரிவித்தனர்.

    பின்னர், இந்த வழக்கில் மத்திய, மாநில சமூகநலத்துறை செயலாளர்களை எதிர்மனுதாரர்களாக தாமாக முன்வந்தது சேர்த்த நீதிபதிகள், இதுபோன்ற சம்பவங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இந்த வழக்கின் தீர்ப்பையும் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

    Next Story
    ×