search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்டு
    X
    சென்னை ஐகோர்ட்டு

    5-ந்தேதி முதல் 21 நீதிபதிகள் வழக்குகளை நேரடியாக விசாரிக்கின்றனர் - ஐகோர்ட்டு அறிவிப்பு

    வருகிற 5-ந்தேதி முதல் 21 நீதிபதிகள் வழக்குகளை நேரடியாக விசாரிக்க உள்ளதாக சென்னை ஐகோர்ட்டு அறிவித்துள்ளது.
    சென்னை:

    கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணொலி காட்சி வாயிலாக வழக்குகளை ஐகோர்ட்டு நீதிபதிகள் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணை முறைக்கு வக்கீல் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. ஐகோர்ட்டை திறக்காததால், வக்கீல்கள் வருமானம் இழந்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டினர். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டில் 6 மூத்த நீதிபதிகள் தலைமையிலான 6 அமர்வுகள் மட்டும், வழக்குகளை நேரடியாக விசாரிக்கும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான நிர்வாக குழு உத்தரவிட்டது. அதாவது, செப்டம்பர் 7-ந்தேதி முதல் 3 அமர்வுகள் காலையிலும், மீதமுள்ள 3 அமர்வுகள் பிற்பகலிலும் குறிப்பிட்ட வழக்குகளை நேரடியாக விசாரித்தன. பிற வழக்குகள் காணொலி காட்சி வாயிலாக விசாரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் மேலும் 21 நீதிபதிகள் வழக்குகளை நேரடியாக விசாரிக்க உள்ளனர். இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு நீதித்துறை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் கே.ரவிச்சந்திரபாபு, பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்தியநாராயணா, வி.பாரதிதாசன், டி.கிருஷ்ணகுமார், வி.பார்த்திபன், எம்.எஸ்.ரமேஷ், டி.ரவீந்திரன், பி.வேல்முருகன், ஜி.ஜெயச்சந்திரன், சி.வி.கார்த்திகேயன், ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எம்.தண்டபாணி, பி.ராஜமாணிக்கம், ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா, சி.சரவணன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் வருகிற 5-ந்தேதி முதல் வழக்குகளை நேரடியாக விசாரிக்க உள்ளனர்.

    எனவே, நேரடியாக வழக்குகளை விசாரிக்கும் முறையில் விருப்பம் உள்ள வக்கீல்கள், புதிய வழக்குகளை தாக்கல் செய்யும்போது, அதை குறிப்பிட்டு தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகளை நேரடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றாலும், ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு கடிதம் கொடுக்க வேண்டும்.

    ஐகோர்ட்டு வளாகத்திலும், கோர்ட்டு அறைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில், காலையில் ‘ரிட்’ மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகளையும், பிற்பகலில் மேல் முறையீட்டு வழக்குகளும், உரிமையியல் வழக்குகளும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுப்பார்கள்.

    நேரடி விசாரணையா? காணொலி காட்சி விசாரணையா? என்பதை வக்கீல்கள் முடிவு செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் பாதுகாப்புக்காக ஐகோர்ட்டு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிவிப்புகளை அனைவரும் தீவிரமாக பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×