search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    நீதிபதிகள் நம்பிக்கை வீண் போகக் கூடாது- கமல்ஹாசன்

    நீதிக்கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக் கூடாது. பாபர் மசூதி இடிப்பு பற்றி கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார்.
    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந் தேதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பா.ஜ.க. மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்பட 49 பேர் மீது குற்றம் சாட்டி சி.பி.ஐ. போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

    17 பேர் இறந்து விட்டதால், மீதி 32 பேர் மீது உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இந்த வழக்கை ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நிறைவு செய்து தீர்ப்பளிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்பின்னர் மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து, செப்டம்பர் இறுதிக்குள் தீர்ப்பளிக்குமாறு உத்தரவிட்டது.

    அதன்படி இந்த வழக்கில் சிபிஐ நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்ப்பு வழங்கினார். அப்போது, பாபர் மசூதி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள அனைவரையும் விடுவிப்பதாக அறிவித்தார். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீதான குற்றங்களை போதிய ஆதாரங்களுடன் சிபிஐ நிரூபிக்கத் தவறியதால் 32 பேரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், பாபர் மசூதி இடிப்பு வழக்கு குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

    நீதிக்கு முன் வலிமையான வாதங்களையும், அழுத்தமான ஆதாரங்களையும் சமர்பிக்காதது பொறுப்பற்ற செயலா?. வழக்கு தொடுத்தவர்கள் ஆதாரங்களை சமர்ப்பிக்காதது பொறுப்பற்ற செயலா? திட்டமிட்ட செயலா?. நீதிக்கிடைக்கும் என்ற இந்தியனின் நம்பிக்கை வீண் போகக் கூடாது என கூறியுள்ளார். 
    Next Story
    ×