search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முற்றுகை
    X
    முற்றுகை

    பூதலூர் பஸ் நிலையத்தை சீரமைக்கக்கோரி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

    பூதலூர் பஸ் நிலையத்தை சீரமைக்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்காட்டுப்பள்ளி:

    பூதலூர் பஸ் நிலையத்தை சீரமைக்க வேண்டும். பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் கழிவறை கட்ட வேண்டும். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் கடந்த மார்ச் மாதம் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பூதலூர் தாசில்தார் சிவக்குமார், போராட்டம் அறிவித்த மக்கள் உரிமை கூட்டமைப்பினருடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அதிகாரிகள் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதி அளித்தனர்.

    அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நேற்று பூதலூர் ஒன்றிய அலுவலகத்தை மக்கள் உரிமை கூட்டமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு கூட்டமைப்பின் துணை தலைவர் வீரசிங்கம் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜ்குமார், அற்புதராஜ், புண்ணியமூர்த்தி, தமிழன் காமராஜ், நாகராஜன், அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தின்போது கோரிக்கைகளை நிறைவேற்றாத பூதலூர் ஒன்றிய ஆணையர் மற்றும் வட்டார வளர்ச்சி அதிகாரியை கண்டித்தும், கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், பூதலூர் வருவாய் ஆய்வாளர் பிரேமாவதி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் உரிமை கூட்டமைப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×