search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் மஞ்சள் மூடைகள் பறிமுதல்- 2 பேர் கைது

    தொண்டி அருகே இலங்கைக்கு கடத்த இருந்த 2 டன் மஞ்சள் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தொண்டி:

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள காரங்காடு கிராமத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக மஞ்சள் மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ராமநாதபுரம் கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் போலீசார் அப்பகுதியில் நேற்று அதிகாலை அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது முள்ளிமுனை, காரங்காடு கிராமங்களுக்கு இடையே கடற்கரைக்கு செல்லும் சாலையில் கடற்கரை ஓரத்தில் உள்ள காட்டுப் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தில் சிலர் மூடைகளை இறக்கிக் கொண்டிருப்பதை போலீசார் பார்த்தனர்.

    ஆனால் போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பியோட முயன்றனர். அவர்களை விரட்டி பிடித்த போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இங்கிருந்து இலங்கைக்கு மஞ்சள் மூடைகளை கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்ததாக தெரிவித்தனர். உடனே அவற்றை கைப்பற்றிய போலீசார் தங்கச்சிமடத்தை சேர்ந்த இன்னாசி ஜிப்ரி (வயது 24), ராமேசுவரத்தை சேர்ந்த ராஜூ(54) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். கைப்பற்ற பட்ட 2,325 கிலோ எடையுள்ள 93 மஞ்சள் மூடைகளையும், கைது செய்யப்பட்ட 2 பேரையும் தொண்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய சென்னையை சேர்ந்த 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வதற்கு மஞ்சள் பயன்பட்டு வருகிறது. அதேபோல் கிருமி நாசினியாகவும் இருப்பதால் தமிழகத்தில் உணவில் அதிக அளவில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ மஞ்சள் 90 முதல் 100 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் இலங்கையில் ஒரு கிலோ மஞ்சள் 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதனால் தமிழக கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு மஞ்சளை படகு மூலம் கடத்தும் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

    இங்கிருந்து படகு மூலம் மஞ்சளை கடத்திச் சென்று இலங்கையிலிருந்து வரும் படகில் நடுக்கடலில் வைத்து தங்கத்தை பெற்றுக்கொண்டு மஞ்சளை அவர்களிடம் ஒப்படைக்க திட்டமிட்டு இருந்தனரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×