search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு
    X
    வழக்கு

    மதுரை மாவட்டத்தில் கணினி மைய ஊழியர்கள், புரோக்கர்கள் 12 பேர் மீது வழக்கு

    மதுரை மாவட்டத்தில் பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தில் மோசடி செய்த கணினி மைய ஊழியர்கள், புரோக்கர்கள் 12 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    மதுரை:

    பிரதமரின் விவசாய நிதியுதவி (கிசான் சம்மான்) திட்டத்தில் தகுதியான பயனாளிகளுக்கு மத்திய அரசால் தலா ரூ. 2 ஆயிரம் வீதம் 3 தவணைகளில் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டில் தமிழகத்தில் இத்திட்டத்தில் பெரிய அளவிலான மோசடி நடந்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது. இணைய வழியில் பயனாளிகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு வேளாண் அதிகாரிகள் பயன்படுத்த வேண்டிய பாஸ்வேர்டை திருடி வேளாண்துறையின் கீழ்நிலை அலுவலர்கள் சிலர், தனியார் இ-சேவை மைய ஊழியர்கள் மோசடியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வேளாண் துறை அலுவலர்கள், தனியார் கணினி மைய ஊழியர்கள் பலர் சி.பி.சி. ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்டத்தில் இந்த திட்டத்தில் நடந்துள்ள மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு 16 ஆயிரத்து 474 பேர் இந்த திட்டத்தில் பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 11 ஆயிரத்து 135 பேர் தகுதியற்றவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.

    இவர்கள் அனைவருக்கும் முதல் தவணையும், பகுதி நபர்களுக்கு 2-வது தவணையும் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

    மதுரை மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களிலும் தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை ரூ.1.40 கோடி வரை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

    இந்த விவரங்களை மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் இருந்து பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கினர். தகுதியற்ற பயனாளிகள் பட்டியலில் இருக்கும் நபர்கள் குறித்து அந்தந்த வட்டாரத்தை சேர்ந்த வேளாண்மை அதிகாரிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்த உள்ளனர்.

    இந்த விசாரணையின் போதே முறைகேட்டில் தொடர்புடைய நபர்கள் கைது செய்யப்படலாம் எனத் தெரிகிறது.

    மேலும் தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்பப் பெறும் பணியில் கிராம நிர்வாக அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இது தொடர்பாக அனைத்து தாசில்தார்கள் மற்றும் துணை தாசில்தார்களுடன் மதுரை மாவட்ட கலெக்டர் வினய் ஆலோசனை நடத்தினார்.

    தகுதியற்ற பயனாளிகள் பட்டியலில் இருப்பவர்களின் வங்கி கணக்கில் பணம் இருந்தால் நேரடியாக திரும்ப பெறப்படுகிறது.

    ஆனால் பலரது வங்கி கணக்கில் பணம் இல்லாமல் இருப்பதுடன் சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறியவதிலும் வேளாண்மை துறையினருக்கு சிக்கலாக இருந்து வருகிறது. அவர்களது செல்போன் எண்களிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

    இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் மூலம் அத்தகைய நபர்களை கண்டறிந்து இன்னும் ஒரு வாரத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகையை திரும்பப் பெற கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கு பிறகும் பணத்தை திரும்பச் செலுத்தாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வது என்று முடிவு செய்யப்பட் டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே இந்த மோசடி தொடர்பாக மதுரை மாவட்டத்தில் கணினி மைய ஊழியர்கள், புரோக்கர்கள் என 12 பேர் மீது சி.பி.சி.ஐ.டி.போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் வேளாண்மை துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

    Next Story
    ×