search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.
    X
    நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தபோது எடுத்தபடம்.

    வெறிநோய் தினத்தையொட்டி நாய்களுக்கு தடுப்பூசி முகாம்- கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார்

    திருவாரூரில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் உலக வெறி நோய் தினத்தையொட்டி நாய்களுக்கு இலவச தடுப்பூசி முகாமை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்தார்.
    திருவாரூர்:

    திருவாரூரில் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உலக வெறி நோய் தினத்தையொட்டி நாய்களுக்கான இலவச தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் ஆனந்த் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    ‘ரேபிஸ்’ என்பது ஒரு வகை வைரஸ் நோய். இது காடுகளில் வாழும் வவ்வால், நரி, ஓநாய் போன்ற விலங்குகளையும், வீட்டு விலங்கான நாயையும் எளிதில் தாக்கக்கூடியது. ரேபிஸ் வைரஸ் தாக்கிய விலங்குகள் மனிதர்களை நேரடியாக கடிப்பதால் அதன் மூலம் மனிதர்களுக்கும் நோய் பரவுகிறது. 97 சதவீத ரேபிஸ் நோய் நாய்கள் மூலம் தான் பரவுகிறது. இந்தியாவில் மட்டும் 2 கோடியே 50 லட்சம் நாய்கள் உள்ளன. அதில் 60 சதவீதம் தெருவில் திரியும் நாய்களாகவும், மீதி வீட்டில் வளர்க்கும் நாய்களாகவும் உள்ளன.

    இந்த நாய்கள் மூலம் ரேபிஸ் நோய் அதிகமாக பரவுகிறது. வீட்டில் வளர்க்கும் விலங்குகளிடம் கவனமாக இருக்க வேண்டும். அவற்றை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதன் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும். ரேபிஸ் நோய் தாக்கிய விலங்குகள் கடித்தவுடன் அந்த இடத்தில் சோப்பு நீரால் 10 முதல் 15 நிமிடம் நன்கு கழுவ வேண்டும்.

    பின்னர் டாக்டரிடம் அணுகி சிகிச்சை மேற்கொண்டால் நோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கால்நடைத்துறை இணை இயக்குனர் தனபாலன், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகுமார், உதவி இயக்குனர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×