search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரிகள், ஊழியர்கள் முகக்கவசம் அணியவில்லை- கொரோனா பரவும் அபாயம்

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் சிறு வியாபாரிகள், ஊழியர்கள், தொழிலாளர்கள் யாரும் முகக்கவசம் அணியாததால் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
    போரூர்:

    சென்னை கோயம்பேட்டில் ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    கொரோனா தீவிரமாக தாக்கிய நேரத்தில் இந்த மார்க்கெட்டில் உள்ள வியாபாரிகள், தொழிலாளர்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டது. இதனால் கடந்த மே மாதம் 5-ந் தேதி காய்கறி மார்க்கெட் மூடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருமழிசையில் தற்காலிக மார்க்கெட் மே 11-ந் தேதி தொடங்கப்பட்டது. அங்கு போதுமான வசதிகள் இல்லாததால் காய்கறி மார்க்கெட்டை மீண்டும் கோயம்பேடுக்கு மாற்ற வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.

    அதனை ஏற்று நேற்று முன்தினம் இரவு முதல் காய்கறி மொத்த மார்க்கெட் கோயம்பேட்டிற்கு மீண்டும் மாற்றப்பட்டது. 198 மொத்த வியாபாரிகள் தற்போது வியாபாரம் செய்து வருகிறார்கள்.

    பல்வேறு கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனையுடன் அங்கு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அந்த விதிமுறைகள் பின்பற்றப்படாமல் அஜாக்கிரதையாக செயல்படுகிறார்கள்.

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரும் சிறு வியாபாரிகள், அங்குள்ள ஊழியர்கள், தொழிலாளர்கள் யாரும் முகக்கவசம் அணிவதில்லை.

    கொரோனா பரவல் பற்றிய அச்ச உணர்வு இல்லாமல் மார்க்கெட் வளாகத்தில் சுற்றி வருகிறார்கள். மேலும் காய்கறி கடைகளில் கிருமி நாசினி எதுவும் வைக்கப்படவில்லை.

    சமூக இடைவெளியை பின்பற்றாமல் அலட்சியமாக மார்க்கெட்டில் உலா வருகிறார்கள். கோயம்பேடு காய்கறி மார்க்கெட் மீண்டும் கொரோனா பரவும் மையமாக மாறி விடாமல் இருக்க மார்க்கெட் நிர்வாகக்குழு உரிய நடவடிக்கையை உடனே எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

    மார்க்கெட் வளாகம், கடைகள் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யவும் அனைவரும் முகக்கவசம் அணிந்து பணிபுரிவதையும் உறுதி செய்ய வேண்டும்.

    நுழைவு வாசலில் உடல் வெப்பத்தை கணக்கிடும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யவும் அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.

    தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் மார்க்கெட்டில் நெரிசல் ஏற்படாமல் காய்கறிகளை வாங்கி செல்ல உரிய ஏற்பாடுகளை மார்க்கெட் கமிட்டி செய்தால்தான் தொற்று பரவலை தடுக்க முடியும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகிறார்கள்.
    Next Story
    ×