search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயில்
    X
    ரெயில்

    சென்னையில் மின்சார ரெயில்களை இயக்க மேலும் தாமதமாகலாம்

    கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மின்சார ரெயில்களை இப்போது இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 7-ந் தேதி முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. முக்கிய நகரங்களுக்கு மட்டும் தினசரி ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

    உறுதி செய்யப்பட்ட டிக்கெட் மட்டுமே வழங்கப்படுவதால் ரெயில்களில் குறிப்பிட்ட அளவு மட்டுமே பயணிகள் பயணம் செய்கின்றனர். முன்பதிவு அல்லாத டிக்கெட் வழங்கப்படாததால் அந்த பெட்டிகள் இணைக்கப்பட வில்லை.

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவையும் நடை பெற்று வருகிறது. ஆனால் ரெயில்கள் காலியாக ஓடுகின்றன.

    இந்த நிலையில் மின்சார ரெயில்கள் எப்போது இயக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்ட வர்கள் மின்சார ரெயில் சேவையை எதிர்பார்த்து வருகின்றனர்.

    இதற்கிடையில் கொரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. ஆனாலும் அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து மக்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் அக்டோபர் 1-ந் தேதி முதல் ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா? அல்லது தளர்வு அறிவிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

    இது குறித்து முதல்- அமைச்சர், உயர்மட்ட குழுவுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அறிவிக்கப்பட உள்ளன.

    இதற்கிடையில் மின்சார ரெயில்கள் வருகிற 7-ந் தேதி முதல் இயக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக தகவல் பரவி வருகிறது. இதற்காக மின்சார ரெயில்களை ஆய்வு செய்யும் பணியும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இது குறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, மின்சார ரெயில்களை இப்போது இயக்குவதற்கு வாய்ப்பு இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

    மேலும் அவர்கள் கூறும் போது, 7-ந் தேதி ரெயில்களை இயக்குவதற்கான எந்த ஏற்பாடும் நடைபெற வில்லை. இது குறித்து அதிகாரிகள் மட்டத்தில் எவ்வித ஆலோசனையும் நடத்தப்படவில்லை.

    தற்போது வரை முன்பதிவு அல்லாத சாதாரண டிக்கெட் வழங்கப்படவில்லை. உறுதி செய்யப்பட்ட பயண டிக்கெட் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.

    எப்போது முன்பதிவு செய்யப்படாத பயணத்திற்கு டிக்கெட்டுகள் வழங்கப்படுமோ அப்போது தான் மின்சார ரெயில்கள் இயக்கப்படும். அனைத்து ரெயில்களும் ஒரே நேரத்தில இயக்கப்படமட்டாது.

    முதல் கட்டமாக குறைந்த அளவிலான சேவை மட்டுமே வழங்கப்படும். அதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகள், வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும்.

    தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் புறநகர் மின்சார ரெயில் சேவை தொடங்க சாத்தியமில்லை என்றார்கள்.

    Next Story
    ×