search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மது குடித்துவிட்டு ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல்- போலீஸ் துணை கமிஷனர் எச்சரிக்கை

    கோவை மாநகரில் மது குடித்துவிட்டு ஓட்டுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு எச்சரித்துள்ளார்.
    கோவை:

    தற்போது கொரோனா பரவல் காரணமாக மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை சோதனையிட முடியாத இக்கட்டான நிலையில் கோவை மாநகர போலீசார் உள்ளனர். கோவையில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு போலீசார் வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கிறார்கள். அவர்களில் 10 பேரில் 2 அல்லது 3 பேர் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களாக உள்ளனர். மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்ய வேண்டுமென்றாலும், அவர்களுக்கு முதலில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறுவதால் அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ய முடியவில்லை.

    மேலும் மதுகுடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிரித்திங் அனலைசரில் ஊதச்சொல்லி பரிசோதனை செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் ஊதும்போது கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து இன்று வரை பிரித்திங் அனலைசர் கொண்டு பரிசோதனை செய்யப்படுவதில்லை. எனவே மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுகிறார்கள் என்று தெரிந்தும் அவர்களை அந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியாத நிலையில் போலீசார் உள்ளனர்.

    இந்த நிலையில் கோவை மாநகருக்குள் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் முத்தரசு கூறியதாவது:-

    கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 2 பேர் மது குடித்து விட்டு வாகனம் ஓட்டி சாலை தடுப்பான்களில் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்தனர். எனவே இனி மது குடித்து விட்டு ஓட்டுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை கடந்த 27-ந் தேதி முதல் அமலாகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×