search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடைந்த மின் கம்பத்தில் ஏறி ஊழியர் பணி புரிந்த காட்சி.
    X
    உடைந்த மின் கம்பத்தில் ஏறி ஊழியர் பணி புரிந்த காட்சி.

    உடைந்த மின் கம்பத்தில் ஏறி உயிரை பணயம் வைத்து பணிபுரிந்த ஊழியர்

    கோவை அருகே உடைந்த மின் கம்பத்தில் உயிரை பணயம் வைத்து மின்வாரிய ஊழியர் ஒருவர் ஏறி, மின்இணைப்புகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தார். இதனை அந்த பகுதி மக்கள் வேடிக்கையாக பார்த்தனர்.
    போத்தனூர்:

    கோவையை அடுத்த மதுக்கரை அருகே உள்ள க.க.சாவடி பகுதியில் பல மின் கம்பங்கள் உடைந்து கீழே விழும் அபாயத்தில் உள்ளன. அந்த கம்பத்தின் உள்ளே இருக்கும் இரும்புக் கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால் காற்று பலமாக வீசினால் கம்பங்கள் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலை உள்ளது. மேலும் இந்த கம்பங்களில் மின் கசிவும் ஏற்படும் அச்சம் உள்ளது. 

    இந்த நிலையில் அங்குள்ள ஒரு உடைந்த மின் கம்பத்தில், உயிரை பணயம் வைத்து மின்வாரிய ஊழியர் ஒருவர் ஏறி, மின்இணைப்புகளை பழுது பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கம்பத்தில் ஏறி இருந்தபோது நல்ல வேளை காற்று பலமாக அடிக்கவில்லை. ஆனால் பாரம் தாங்காமல் மின்கம்பம் விழுந்து விடுமோ? என்கிற அச்சம் நிலவியது. இதனை அந்த பகுதி மக்கள் வேடிக்கையாக பார்த்தனர். இருப்பினும் அவர்கள் ஏதேனும் அசம்பாவிதம் நடந்து விடுமோ? என்று அதிர்ச்சியுடன் உற்று நோக்கினர். 

    இந்த நிலையில் அதில் ஏறிய ஊழியர் சுமார் 20 நிமிடங்கள் கழித்து அதில் இருந்து இறங்கினார். அவர் கீழே இறங்கி வந்த பின்னர்தான், அதனை பார்த்துக்கொண்டிருந்தவர்களுக்கு கலக்கம் நீங்கியது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- 

    அதிக எண்ணிக்கையில் இந்த பகுதியில் மின்கம்பங்கள் பழுதான நிலையில் உள்ளன. ஆனால் அவைகள் மாற்றப்படாமல் பல ஆண்டுகளாகவே உள்ளன. இந்த மின்கம்பங்கள் எப்போது விழும் என்கிற பயத்தில் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் நடமாடும் நிலை உள்ளது. இதற்கிடையில் மின்பராமரிப்பு பணிக்காக அதில் ஏறி பணிபுரியும் ஊழியர்களின் நிலையை பார்த்தாலும் எங்களுக்கு பயமாக உள்ளது. சில ஊழியர்கள் அந்த மின்கம்பங்களில் வேலை செய்யாமல், வந்து பார்த்து விலகி செல்வதும் உண்டு. சில ஊழியர்கள் அதில் தைரியமாக ஏறி பணிகளை செய்வதும் பரிதாபமாக உள்ளது. ஆகவே பழுதான மின்கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சில இடங்களில் பழுதான மின் கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்களை நட்டு வைத்து உள்ளனர். ஆனால் அதில் மின் இணைப்பு கொடுக்கவில்லை. ஆகவே அந்த பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×