search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காய்கறிகள்
    X
    காய்கறிகள்

    கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டது- மொத்த விற்பனை தொடங்கியது

    6 மாதங்களுக்கு பிறகு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டது. அங்கு மொத்த விற்பனை தொடங்கியது.
    சென்னை:

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாத இறுதியில் கோயம்பேடு மார்க்கெட் மூடப்பட்டது. அதனைத் தொடர்ந்து திருமழிசை துணைக்கோள் நகரத்தில் காய்கறி மார்க்கெட்டும், மாதவரம் பஸ் நிலையத்தில் பழ மார்க்கெட்டும், வானகரத்தில் பூ மார்க்கெட்டும் செயல்பட்டு வந்தது. ஆனாலும் போதிய வசதிகள் இல்லாததால் மீண்டும் கோயம்பேடு மார்க்கெட்டை திறக்கவேண்டும் என்று வியாபாரிகள் வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

    இந்த நிலையில் அரசு உத்தரவிட்டதின் பேரில் கடந்த 18-ந் தேதி முதல் கோயம்பேட்டில் உணவு தானிய அங்காடி மட்டும் செயல்பட்டு வருகிறது. 28-ந் தேதி முதல் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திறக்கப்படும் என்றும் அரசு உத்தரவிட்டிருந்தது.

    இதையடுத்து கடந்த சில நாட்களாகவே கோயம்பேடு மார்க்கெட் வளாகம் முழுவதும் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மார்க்கெட் வளாகம் முழுவதும் தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். கிருமிநாசினிகளும் தெளிக்கப்பட்டு வந்தது. வியாபாரிகளும் தங்கள் கடைகளை புதுப்பிக்கும் பணிகளை மேற்கொண்டனர்.

    இதனால் கோயம்பேடு மார்க்கெட் புதுப்பொலிவு பெற்றது. இந்த நிலையில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் நேற்று இரவு 8 மணி அளவில் திறக்கப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) தலைமைச் திட்ட அதிகாரி பெரியசாமி, முதன்மை நிர்வாக அதிகாரி கோவிந்தராஜன் ஆகியோர் ரிப்பன் வெட்டி மார்க்கெட்டை திறந்து வைத்தனர்.

    காய்கறி ஏற்றி வந்திருந்த வாகனங்கள் பச்சைக்கொடி காட்டப்பட்டு மார்க்கெட் வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். பல மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டதால் வியாபாரிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். பூசணிக்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கடைகளுக்கு பூஜைகளும் போடப்பட்டன.

    முன்னதாக காய்கறி மார்க்கெட்டுக்கு வந்த சரக்கு வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஒரு கடைக்கு இரண்டு வாகனங்கள் என்ற வீதத்தில் மட்டுமே மார்க்கெட் வளாகத்திற்குள் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. 12 நுழைவுவாயில்கள் கொண்ட கோயம்பேடு மார்க்கெட்டில் தற்போது 4 நுழைவு வாயில்கள் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளன. நள்ளிரவு முதல் காய்கறி விற்பனை நடந்தது. ஒவ்வொரு கடைக்கும் வரும் வியாபாரிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்பட்டும் மார்க்கெட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து வியாபாரிகளுக்கு காய்கறி விற்பனை செய்யப்பட்டது.

    தினமும் இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சரக்கு வாகனங்கள் வந்து செல்லவும், நள்ளிரவு 1 மணி முதல் காலை 9 மணி வரை வியாபாரிகள் மார்க்கெட்டுக்கு வந்து காய்கறி வாங்கி செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் சங்க தலைவர்கள் கூறுகையில், “பல மாதங்களுக்கு பிறகு கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைப்பிடித்து வியாபாரிகள் அனைவரும் விற்பனையில் ஈடுபடுவோம். விரைவில் பூ மற்றும் பழ சந்தைகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மார்க்கெட்டுக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். காய்கறி வாங்க வருவோர் ஆட்டோ அல்லது டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் தான் வரவேண்டும். வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அந்த அட்டை வைத்திருப்போர் மட்டுமே மார்க்கெட் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்” என்றனர்.

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் முதற்கட்டமாக 200 பெரிய கடைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 300 சதுர அடி அளவு கொண்ட சிறிய மொத்த கடைகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல சிறு வியாபாரிகள் மற்றும் சில்லரை வியாபாரிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
    Next Story
    ×