search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி
    X
    முக ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

    எடப்பாடி பழனிசாமி விவசாயியாக நடந்து கொள்ளவில்லை - கரூர் காணொலி பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் விமர்சனம்

    நானும் விவசாயி தான் என்று சொல்லிக்கிறாரே தவிர, விவசாயியாக நடந்து கொள்ளவில்லை என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் விமர்சித்து உள்ளார்.
    சென்னை:

    கரூர் மாவட்ட தி.மு.க. சார்பில் காணொலி காட்சி மூலம் அக்கட்சியின் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    கொரோனா கால ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே, தினமும் காலையும், மாலையும் காணொலி மூலமாக தமிழ்நாடு முழுவதும் இருக்கும் தொண்டர்களை, நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடி கொண்டே இருக்கிறேன். எந்தச் சூழலிலும் நம்மால் கட்சிப் பணியாற்ற முடியும் என்பதற்கு உதாரணமாகவே இதனைத் தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறேன்.

    இதன் உச்சக்கட்டமாக 3,700-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட பொதுக்குழுவையே காணொலி மூலமாக நடத்தி கட்சியின் பொதுச் செயலாளரையும், பொருளாளரையும் அதில் தேர்வு செய்தோம். தற்போது 530-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து 50 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கக்கூடிய வகையில் மிகப் பிரமாண்டமாக இந்த முப்பெரும் விழாவை மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி நடத்தி காட்டியிருக்கிறார்.

    1980-ம் ஆண்டு மதுரை ஜான்சி ராணி பூங்காவில் கருணாநிதியால் தி.மு.க. இளைஞரணி தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது இளைஞரணிக்கான ஒரு கொள்கை முழக்கத்தை கருணாநிதி எழுதினார். அந்த முழக்கம், இந்த கொரோனா காலத்திலும் பொருத்தமானது என்பதால் அதனை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன்.

    ‘நாங்கள் நடந்து கொண்டே இருப்போம்; எங்கள் கால்கள் நடையை நிறுத்தா! நாங்கள் எழுதிக் கொண்டே இருப்போம்; எங்கள் கைகள் எழுதுவதை நிறுத்தா! நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம்; எங்களுடைய உதடுகளும், நாவுகளும் பேசுவதை நிறுத்தா! காரணம் நாங்கள் ஆழமான கொள்கைகளுக்குச் சொந்தக்காரர்கள். நாங்கள் பெரியாரின் தொண்டர்கள். அண்ணாவின் தம்பிகள்! என்று கருணாநிதி எழுதினார். எந்தச் சூழலிலும் நடப்பதை நிறுத்த மாட்டோம். எழுதுவதை நிறுத்தமாட்டோம். பேசுவதை நிறுத்த மாட்டோம்’ என்று கருணாநிதி சொன்ன கட்டளையைத் தான் இன்று ஒவ்வொரு மாவட்ட தி.மு.க.வும் நிறைவேற்றி கொண்டு இருக்கிறது.

    தி.மு.க. வீட்டுக்கு விளக்காகவும் நாட்டுக்கு தொண்டனாகவும் இருக்க வேண்டும் என்று தான் அண்ணாவும், கருணாநிதியும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள். ‘ஆட்சியில் இருந்தால் செயல்படுத்துவது. ஆட்சியில் இல்லாவிட்டால் செய்ய வைப்பது. இதுதான் தி.மு.க.வின் முழக்கமாக நேற்றும் இருந்தது. இன்றும் இருக்கிறது.

    மத்திய அரசு கொண்டு வரும் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய பா.ஜ.க. அரசின் விவசாய விரோத சட்டத்துக்கு தலையாட்டிய எடப்பாடி அரசை கண்டித்தும் நாளைய தினம் (இன்று) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நாங்கள் மட்டுமல்ல, பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலிதளம் இந்தச் சட்டங்களை எதிர்த்துள்ளது. மத்திய அமைச்சரவையில் இருந்து ஒரு மந்திரியே விலகி உள்ளார். இதை விட மிகப்பெரிய எதிர்ப்பு வேறு எதுவும் இருக்க முடியாது.

    ஆனால், எடப்பாடி பழனிசாமி ஆதரிக்கிறார். தான் ஆதரிக்கிறது மட்டுமில்லாமல். மற்றவர்களையும் ஆதரிக்கச் சொல்கிறார். ‘நானும் விவசாயி, நானும் விவசாயிதான்’ என்று எடப்பாடி பழனிசாமி சொல்லிக் கொள்கிறாரே தவிர, விவசாயியாக நடந்துகொள்ளவில்லை.

    இந்த கிரிமினல் கேபினெட்டை, கோட்டையை விட்டு துரத்தி சிறையில் வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள். மக்களுக்காக, மக்களை பற்றி கவலைப்பட கூடிய, மக்களுக்கு நன்மை செய்யக் கூடிய, மக்களது எதிர்பார்ப்பை செய்து கொடுக்க கூடிய ஒரே ஆட்சி தி.மு.க. தான். அதனை உருவாக்க மக்கள் தயாராகிவிட்டார்கள். நாம் அதற்கான பணிகளை தொடங்குவோம்.

    கொரோனாவை விடக் கொடிய ஊழல் வைரஸ் கூட்டத்தை இந்த கோட்டையில் இருந்து விரட்ட வேண்டும். பெரியாரின் சமூகநீதி ஆட்சியை அமைப்போம். அண்ணாவின் மாநில சுயாட்சி ஆட்சியை அமைப்போம். கருணாநிதியின் நவீன தமிழகத்தை உருவாக்குவோம். அதற்கு கரூர் முப்பெரும் விழாவில் சபதம் எடுப்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.
    Next Story
    ×