search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தியபோது
    X
    காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தியபோது

    கொரோனா தடுப்பு பணி குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை - அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தல்

    கொரோனா தடுப்பு பணி குறித்து 15 மாவட்ட கலெக்டர்களுடன் தலைமைச் செயலாளர் க.சண்முகம் ஆலோசனை நடத்தினார். அப்போது அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தினார்.
    சென்னை:

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து தலைமைச் செயலாளர் க.சண்முகம் காணொலி காட்சி வழியாக ஆலோசனை நடத்தினார்.

    தலைமைச் செயலகத்தில் இருந்து நடந்த இந்த கூட்டத்தில், கோவை, சேலம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், திருப்பூர், காஞ்சீபுரம், தஞ்சாவூர், ஈரோடு, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், நாமக்கல், தர்மபுரி, திருவாரூர் ஆகிய 15 மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில், மாவட்டங்களில் பரிசோதனை மேற்கொண்டு நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், இறப்பு விகிதத்தை குறைத்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நோய்த்தொற்று அறிகுறியை கண்டறிந்து தொற்று உள்ளவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்தும் தலைமைச் செயலாளரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், தடை செய்யப்பட்ட பகுதிகளில், கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தவும், தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும், சராசரியாக ஒவ்வொரு நாளும் எத்தனை பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதை அறிந்து அதனை கண்காணிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும், மருத்துவமனைகளில் தேவையான படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள் மற்றும் பிற மருத்துவ சாதனங்கள் தயாராக இருப்பதை மாவட்ட கலெக்டர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வலியுறுத்தினார்.

    கடந்த சில நாட்களாக மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் நோய்த்தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற காரணத்தால் அதனை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும், இறப்பு விகிதத்தை குறைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலுக்கான காரணங்களை ஆராய்ந்து தீவிரமாக கண்காணித்திட வேண்டும். அதற்கு முறையாக திட்டமிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

    பிரதமருடனான, முதல்-அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், தமிழக அரசு பின்பற்றிய வழிமுறைகளுக்காக, தமிழக அரசை பிரதமர் வெகுவாக பாராட்டினார்.

    எனவே, மாவட்ட கலெக்டர்கள் கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு பணியில் முழு கவனம் செலுத்தி கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுத்திட அனைத்து துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும் எனவும் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வலியுறுத்தினார்.

    இந்த கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்யா மிஸ்ரா, கூடுதல் தலைமை செயலாளர் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை ஆணையர் பணீந்திரரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. திரிபாதி, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொதுத்துறை முதன்மை செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ சேவை கழக மேலாண்மை இயக்குனர் பி.உமாநாத் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
    Next Story
    ×