search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

    கோவையில் வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    மத்திய அரசு அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா-2020, விவசாயிகள்(அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்த உறுதி மொழி மற்றும் சேவை மசோதா-2020, விவசாயிகள் உற்பத்தி, வர்த்தகம் மற்றும் பொருளாதார (ஊக்குவிப்பு மற்றும் வசப்படுத்துதல்) மசோதா-2020 ஆகிய 3 வேளாண் சட்ட மசோதாக்களை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டங்களுக்கு பல்வேறு அமைப்புகள், கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் மேற்கண்ட சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த முற்றுகை போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்களும் ஆதரவு தெரிவித்திருந்தன.

    விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் ஸ்டாலின் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கூட்டத்தை கலைப்பதற்காக வஜ்ரா வாகனமும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. விவசாயிகள் நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும் விவசாயிகளும் கலெக்டர் அலுவலகத்திற்கு நுழையாமல் தடுக்க அந்த சாலை முழுவதும் இரும்பு தடுப்புகள் கொண்டு மூடப்பட்டு இருந்தது.

    இதனைத்தொடர்ந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் சிலர், மத்திய அரசின் இந்த வேளாண் சட்டம் விவசாயிகளை கட்டி போடுவதாக கூறி தங்களது உடலை சங்கிலியால் கட்டிக்கொண்டு வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சில விவசாயிகள் தங்களது தோள்களில் மண்வெட்டிகளை சுமந்துகொண்டு வந்தனர்.

    இதில் விவசாயிகளுக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு நிர்வாகிகள் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுமுகம், மனோகர், கிருஷ்ணசாமி, தங்கவேல், மாதர் சங்க செயலாளர் ராதிகா, தீத்திபாளையம் பெரியசாமி, மேட்டுப்பாளையம் மூர்த்தி, கோட்டூர் மணி, நடுப்பாளையம் ஜீவா, தங்கவேல், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் பழனிச்சாமி பேசும்போது, மத்திய அரசு கொண்டு வந்துள்ள இந்த வேளாண் சட்ட மசோதாக்கள், சாதாரண விவசாயிகளை பெரு நிறுவனங்களுக்கு ஒப்பந்த முறையில் அடிமையாக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். மேலும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு வழங்கிய அறிக்கையின் படி விவசாய விளைபொருட்களை விலை நிர்ணயம் செய்ய உரிய வகையில் விவசாய விளைபொருட்களை குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணய சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விவசாயிகளின் இந்த முற்றுகை போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×