search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எஸ்பி பாலசுப்ரமணியம்
    X
    எஸ்பி பாலசுப்ரமணியம்

    எஸ்.பி.பி. உடல் அடக்கம்- பண்ணை வீட்டை தேர்வு செய்த நண்பர்கள்

    எஸ்.பி.பி. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கியிருக்கும்போது கிடைக்கும் அமைதியை பலமுறை நண்பர்களிடம் பகிர்ந்துள்ளதால், அவரது உடலை பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய நண்பர்கள் தேர்வு செய்தனர்.
    எஸ்.பி.பி.யின் சொந்த ஊர் ஆந்திர மாநிலம் நெல்லூர். ஆனாலும் அவர் தமிழில் அதிக பாடல்கள் பாடி இருப்பதால் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வந்தார்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகள் உள்பட 16 மொழிகளில் பாடி உள்ளார். பாடல் பதிவுக்காக அவர் சென்னை தவிர ஐதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வருவார்.

    அவர் மிகவும் பிசியாக இருந்த காலக்கட்டத்தில் அமைதியை விரும்பினார். அவருக்கு மரங்கள், செடி- கொடிகள் உள்ளிட்ட இயற்கையுடன் கூடிய இடங்கள் பிடிக்கும்.

    அவர் தனது அமைதிக்காக தாமரைப்பாக்கத்தில் 15 ஏக்கர் கொண்ட பண்ணை வீட்டை விலைக்கு வாங்கினார். அங்கு ஏராளமான மரங்களை வளர்த்தார். அமைதியை விரும்பும் போதெல்லாம் அவர் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு சென்று சில நாட்கள் தங்குவார்.

    சமீபத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியவுடன் சினிமா தொழில் முடங்கியதால் அவர் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு சென்று சில நாட்கள் தங்கியிருந்தார்.

    அங்கு இருந்த நேரத்தில் பண்ணை வீட்டை சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு நல உதவிகளையும் வழங்கி உள்ளார்.

    எஸ்.பி.பி. இறந்ததும் அவரது உடலை அடக்கம் செய்வது தொடர்பாக கேள்வி எழுந்தபோது அவரது நண்பர்கள் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

    எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு 30 முதல் 40 ஆண்டுகள் பழக்கமுள்ள நண்பர்கள் சிலர் உள்ளனர். எஸ்.பி.பி. தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் தங்கியிருக்கும்போது கிடைக்கும் அமைதியை பலமுறை நண்பர்களிடம் பகிர்ந்துள்ளார்.

    அதை நினைவில் வைத்தே அவர் இறந்த பிறகு நிரந்தர அமைதியை பெற பண்ணை வீட்டில் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று நண்பர்கள் கூறியுள்ளனர்.

    அதன்படி பண்ணை வீட்டில் அவரது உடல் அஞ்சலி வைக்கப்பட்ட இடத்தையும் நண்பர்களே தேர்வு செய்துள்ளனர். அதேபோல் இறுதி சடங்கு செய்து உடலை அடக்கம் செய்யும் இடத்தையும் நண்பர்களே தேர்வு செய்தனர்.

    Next Story
    ×