search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் உள்ள கி.பி. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு.
    X
    ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் உள்ள கி.பி. 13-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டு.

    டி.கல்லுப்பட்டி அருகே பாண்டியர் கால பழமையான கல்வெட்டு கண்டுபிடிப்பு

    டி.கல்லுப்பட்டி அருகே 800 ஆண்டுகள் பழமையான பாண்டியர் கால கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    பேரையூர்:

    மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை உதவி பேராசிரியர் முனீஸ்வரன், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, வழக்கறிஞர்கள் நாகபாண்டி, சிவகுமார் ஆகியோர் கொண்ட குழுவினர் டி.கல்லுப்பட்டி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது ஈஸ்வரப்பேரி கண்மாய் மடையில் பழமையான பாண்டியர் கால கல்வெட்டு இருந்தது தெரியவந்தது. அந்த கல்வெட்டை வைத்து ஆய்வு செய்த போது இப்பகுதியில் 800 ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் பாசனம் மூலம் விவசாயம் நடைபெற்று வந்தது தெரிய வருகிறது.

    இது குறித்து தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு, உதவி பேராசிரியர் முனீஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:-

    டி.கல்லுப்பட்டி அருகே தேவன்குறிச்சி மலை உள்ளது. இந்த மலையின் வடகிழக்கு பகுதியில் ஈஸ்வரப்பேரி கண்மாய் உள்ளது. மலைச்சரிவில் இயற்கையாக அமைந்த பாறையை வெட்டி இக்கண்மாய்க்கு அக்காலத்தில் மடை அமைத்துள்ளனர். இதில் நீர் வெளியேற மூன்று கண் அமைப்பு உள்ளது.

    இதன் முதல் கண்ணில் தரையில் பதிக்கப்பட்டுள்ள 3 அடி நீளமும், 1 அடி அகலமும் உள்ள ஒரு கல்லில் ஏழு வரிகள் கொண்ட கி.பி. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு காணப்பட்டது. நீர் வழிந்தோடும் இடத்தில் இக்கல்வெட்டு இருந்ததால் அதில் பல சொற்கள் அழிந்த நிலையில் உள்ளது. ஸ்வஸ்தி ஸ்ரீ என தொடங்கும் இக்கல்வெட்டின் சொற்கள் பாடல் போன்ற வடிவில் அமைந்துள்ளது.

    கலிங்கத்தரையர் பெயர் கொண்ட பெருங்குன்றை பெரியகுளம் என கல்வெட்டில் குறிப்பிடப்படுகிறது. இதன் மூலம் கண்மாய் மற்றும் அதன் மடை கலிங்கத்தரையரால் கி.பி. 13-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டதாக கருதலாம். கலிங்கத்தரையர் என்பவர்கள் பிற்கால பாண்டியர் ஆட்சி காலத்தில் கி.பி. 12, 13-ம் நூற்றாண்டுகளில் இருந்த குறுநில தலைவர்கள் ஆவர்.

    இந்த மடையின் மேற்கு பகுதியில் உள்ள பாறையில் திரிசூலம், சூரியன், சந்திரன், பாண்டியரின் செண்டுக்கோல் ஆகியவை கோட்டோவியமாக செதுக்கப்பட்டுள்ளது. மடை அமைத்துக் கொடுத்து சந்திரனும் சூரியனும் இருக்கும் வரைக்கும் இந்த தர்மம் நிலைத்திருக்கும் என்பதன் அடையாளமாக இந்த சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×