search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரூ.1¼ கோடி முறைகேடு - கனரா வங்கி முதுநிலை மேலாளருக்கு 2 ஆண்டு சிறை

    ரூ.1¼ கோடி முறைகேடு செய்த கனரா வங்கி முதுநிலை மேலாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பளித்தது.
    கோவை:

    கோவையை அடுத்த கவுண்டம்பாளையம் கனரா வங்கியில் முதுநிலை மேலாளராக கடந்த 2008-ம் ஆண்டு பணியாற்றி வந்தவர் ஷஜீஸ் (வயது 53). இவர், வங்கி விதிமுறைகளை மீறி ரூ.1 கோடியே 23 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பில் 26 வீட்டு கடன்களை வழங்கி உள்ளார். இந்த கடன்களை பி.எஸ்.என்.எல். மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றியவர்கள் பெற்று உள்ளனர்.

    கடன் பெறுவதற்கான சம்பள சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை ராகவ் பாலாஜி (49) மற்றும் ஜெயசங்கர் (51) ஆகியோர் போலியாக தயாரித்து வழங்கியதால் வங்கிக்கு ரூ.1 கோடியே 31 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில் சென்னை சி.பி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

    இது தொடர்பான வழக்கு கோவை சி.பி.ஐ. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.நாகராஜன் விசாரித்தார். இந்த வழக்கு மீதான விசாரணை முடிந்து தீர்ப்பு கூறப்பட்டது. இதில் கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் ஷஜீஸ்க்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ராகவ் பாலாஜி மற்றும் ஜெயசங்கர் ஆகியோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், மொத்தமாக ரூ.8 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
    Next Story
    ×