search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சையில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப் படுவதை படத்தில் காணலாம்.
    X
    தஞ்சையில் நடமாடும் வாகனம் மூலம் கொரோனா பரிசோதனை செய்யப் படுவதை படத்தில் காணலாம்.

    தஞ்சையில் இதுவரை முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து ரூ.4½ லட்சம் அபராதம் வசூல்

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணியாதவர்களிடம் இருந்து இதுவரை ரூ.4½ லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
    தஞ்சாவூர்:

    சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் இன்று உலகையே ஆட்டி படைத்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மருந்து கண்டுபிடிக்கும் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    மேலும் கொரோனா பரவுவதை தடுக்க அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முக கவசம் அணிந்து வருகிறார்கள். இருப்பினும் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் 51 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் கொரோனா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரங்களும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கொரோனா தொற்றை கண்டறிய காய்ச்சல் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    தினமும் 25-க்கும் மேற்பட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவ முகாம்களுக்கு வரும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை ரூ.9 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பில் 1000 கிலோ கபசுர குடிநீர் பவுடர் வாங்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் உள்ள 4 நகர்நல மையங்களில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி இதுவரை 1,201 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் மூலம் 46 ஆயிரம் பேர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு உள்ளனர். மாநகராட்சி பகுதியில் மட்டும் நேற்றுவரை 13 ஆயிரத்து 52 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 1,804 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சை மாநகராட்சி பகுதியில் முக கவசம் அணியாமல் வரும் பொதுமக்களிடம் இருந்து மாநகர சுகாதார ஆய்வாளர்கள் அபராதம் வசூலிக்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி பகுதியில் இதுவரை 4 ஆயிரத்து 527 பேரிடம் இருந்து ரூ.4 லட்சத்து 54 ஆயிரத்து 900 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×