search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    திருப்பூரில் பிளஸ்-2 மாணவிக்கு கத்திகுத்து- காதலன் வெறிச்செயல்

    திருப்பூரில் பிளஸ்-2 மாணவியை தனியாக அழைத்து சென்ற காதலன் காதலை கைவிடுமாறு கூறியதால் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்று வெறிச்செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அனுப்பர்பாளையம்:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த வெள்ளம்படி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 19) . இவர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருக்கும் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் காதலாக மாறி உள்ளது. இதையடுத்து இருவரும் செல்போனில் தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்த நிலையில் மணிக்கு கஞ்சா பழக்கம் இருப்பது காதலியான அந்த மாணவிக்கு தெரிய வந்துள்ளது. இதனால் மாணவி மணியிடம் பேசுவதை படிப்படியாக குறைத்து கொண்டதாக தெரிகிறது. மேலும் கடந்த சில நாட்களாக மணியிடம் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்திக்குள்ளான மணி விடாப்பிடியாக அந்த மாணவியை தொடர்பு கொண்டு பேசி உள்ளார். பின்னர் என்னிடம் பேசவில்லையென்றால் நான் செத்து விடுவேன் என்றும் கூறி உள்ளார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை மாணவியிடம் செல்போன் மூலமாக பேசிய மணி உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறி உள்ளார். பின்னர் மாலை 6 மணிக்கு மோட்டார்சைக்கிளில் அந்த மாணவியை தனியாக அழைத்து கொண்டு வஞ்சிப்பாளையம் ரெயில்வே மேம்பாலம் அருகில் உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த மாணவி மணியிடம், உனக்கு கஞ்சா பழக்கம் இருப்பதால் உன்னை பிடிக்கவில்லை என்றும் காதலை கைவிடுமாறும் கூறி உள்ளார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மணி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் உடலில் பல இடங்களில் பயங்கரமாக குத்தி உள்ளார். அப்போது மாணவி வலியால் அலறி துடித்து உள்ளார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத மணி மாணவி மீது கல்லை தூக்கி வீசி உள்ளார். இதில் படுகாயமடைந்த அந்த மாணவி, அந்த இடத்திலேயே மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

    இதையடுத்து மணி அங்கிருந்து புறப்பட்டு, உடுமலையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இரவு முழுவதும் மயங்கிய நிலையில் இருந்த அந்த மாணவிக்கு நேற்று காலை 6 மணிக்கு மயக்கம் தெளிந்துள்ளது. அங்கிருந்து எழுந்து தனியாக நடந்து வந்துள்ளார். அப்போது ரத்தக்கறைகளுடன் அந்த மாணவி வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடம் நடந்த சம்பவத்தை கூறி அந்த மாணவி அழுதுள்ளார்.

    உடனடியாக இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அந்த மாணவி அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணியை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×