
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தன்னுடைய ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் இந்தி தெரியவில்லை என்பதற்காக ஓய்வுபெற்ற அரசு மருத்துவர் ஒருவருக்கு கடன் வழங்க முடியாது என்று பொதுத்துறை வங்கியில் பணியாற்றும் வட இந்தியாவை சேர்ந்த மேலாளர் கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. மேலாளர் மீது கடும் நடவடிக்கை தேவை.
தமிழ்நாட்டில் வங்கியில் பணியாற்றிக்கொண்டு இந்தி தெரியாவிட்டால் கடன் வழங்க முடியாது என்று திமிராகக்கூறிய வங்கி மேலாளர் தமிழகத்தில் பணியாற்ற தகுதியற்றவர். உடனடியாக அவரை உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலத்திற்கு வங்கி நிர்வாகம் விரட்டியடிக்க வேண்டும்.
மத்திய அரசுத்துறை அலுவலங்களிலும், பொதுத்துறை நிறுவனங்களிலும் உள்ளூர் மக்களை பணிக்கு அமர்த்த வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை அரசு செவிமடுக்காததன் விளைவுதான் இத்தகைய கூத்துகள். இனியாவது நிலைமை மாறவேண்டும்.
இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார்.