search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
    X
    தமிழகத்தில் நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    தமிழகத்தில் 3,501 நகரும் நியாயவிலை கடைகள்- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

    தமிழகத்தில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கை கூட்டத்தொடரின்போது, பேரவை விதி எண் 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அப்போது, அம்மா நகரும் நியாயவிலை கடை திட்டம் தொடங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

    இதனை அடுத்து தமிழகத்தில் ரூ.9 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 3,501 நகரும் நியாய விலைக்கடைகளுக்கான திட்டம் தொடங்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 262 கடைகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 கடைகளும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 168 கடைகள் உள்பட தமிழகம் முழுவதும் 3,501 நகரும் அம்மா நியாய விலை கடைகள் உருவாக்கப்பட்டன.

    இந்த  நகரும் நியாயவிலை கடை வாகனங்களை முதமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.



    இந்த திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் 5 லட்சத்து 36 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவர். மலைப்பாங்கான பகுதிகள், காட்டுப்பகுதிகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நகரும் நியாயவிலை கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பொது விநியோகத் திட்டத்தில் திருச்சியில் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    சிசிடிவி, ஜிபிஎஸ் உடன் மின்சாரம், சூரியசக்தியில் இயங்கும் 13 ஆட்டோ சேவையையும் முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.
    Next Story
    ×