search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான உதயகுமார்
    X
    கைதான உதயகுமார்

    திண்டுக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.17 லட்சம் மோசடி செய்தவர் கைது

    திண்டுக்கல்லில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.17 லட்சம் மோசடி செய்தவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
    திண்டுக்கல்:

    மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் உதயகுமார் (வயது 44). இவருடைய மனைவி சத்யா (40). இவர்கள் இருவரும் திண்டுக்கல் பஸ் நிலையம் அருகே கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நிதி நிறுவனத்தை தொடங்கினர். இந்த நிதி நிறுவனத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த வின்சென்ட் அருள்சாமி என்பவர் மேலாளராக வேலை பார்த்தார். இவர் மூலம் 2 மாதத்தில் பொதுமக்களிடம் இருந்து ரூ.17 லட்சம் வரை தம்பதியினர் பெற்றனர். பின்னர் அந்த நிதி நிறுவனத்தை திடீரென்று மூடிவிட்டு இருவரும் தலைமறைவாகி விட்டனர்.

    இதையடுத்து உதயகுமாரும் அவருடைய மனைவியும் நிதி நிறுவனம் நடத்தி ரூ.17 லட்சம் மோசடி செய்துவிட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியாவிடம் வின்சென்ட் அருள்சாமி புகார் கொடுத்தார். அதன் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கும்படி குற்றப்பிரிவு போலீசாருக்கு சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதையடுத்து குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ஆறுமுகம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சத்யா, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்பிரபு ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தம்பதியினரை வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் உதயகுமார் புதுச்சேரியில் மற்றொரு நிதி நிறுவனம் நடத்தி வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், புதுச்சேரி போலீசார் உதவியுடன் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் அவருடைய மனைவியை கைது செய்ய உதயகுமாரின் வீட்டுக்கு சென்ற போது அவர் தலைமறைவாகி விட்டது தெரியவந்தது. பின்னர் உதயகுமாரை திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர் மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட ஊர்களில் நிதி நிறுவனம் மற்றும் மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி வழங்கும் நிறுவனம் உள்ளிட்டவற்றை நடத்தி பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் மோசடி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான சத்யாவை வலைவீசி தேடி வருகின்றனர். அரசு அனுமதி பெறாத நிதி நிறுவனங்களில் முதலீடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று குற்றப்பிரிவு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    Next Story
    ×