search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க.ஸ்டாலின்
    X
    மு.க.ஸ்டாலின்

    வேளாண் மசோதாவுக்கு மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு ஏன்? - மு.க.ஸ்டாலின் கண்டனம்

    வேளாண் மசோதாவுக்கு, மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு ஏன்? என்று முதல்வர் பழனிசாமிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தன்னையும், தனது அமைச்சர்களையும் பாதுகாக்க பாஜக அரசின் விவசாயிகள் விரோதச் சட்டங்களுக்கு வக்காலத்து வாங்கிய முதல்வர் பழனிசாமி - 'ஒப்புதல் வாக்குமூலம்' அளித்து விவசாயப் பெருமக்களிடம் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களுக்கும், விருப்பத்துடன் முன்வந்து ஆதரவு அளித்து விட்டு - அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், மத்திய பாஜக அரசுக்கும், களிப்பு பொங்க வக்காலத்து வாங்கி' ஒரு மாநிலத்தின் முதல்வரே அறிக்கை வெளியிட்டிருப்பது, அவரால் மக்களுக்கு உருவான பல்வேறு மோசமான நிகழ்வுகளில், மிகவும் மோசமானதாகும்.
    பாஜகவின் விவசாயிகள் விரோத மசோதாக்களை, பஞ்சாப் மாநிலம் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களும், பா.ஜ.க.,வின் கூட்டணிக் கட்சிகள் மட்டுமின்றி - வேறு அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. 13 கட்சிகள் அந்த மசோதாக்களை எதிர்க்கின்றன; அதிமுக. உள்ளிட்ட 4 கட்சிகள் மட்டும் ஆதரிக்கின்றன.

    இவ்வாறான நிலையில் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளதற்குப் பதிலாக, 'நான் பாஜக கூட்டணியில் இருக்கிறேன். முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். இன்னும் ஆறு மாதங்களுக்கு - நானும், எனது அமைச்சரவை சகாக்களும், ஏற்கனவே செய்த - இப்போதும் செய்து கொண்டிருக்கின்ற - இனியும் செய்வதற்குத் திட்டமிட்டுள்ள - ஊழல்களில் இருந்து தப்பிக்க, பாஜகவின் பாதுகாப்பு தேவை. அதனால் ஆதரித்தேன்; மன்னித்து விடுங்கள்' என்று தமிழக விவசாயப் பெருமக்களிடம், தண்டனிட்டு, கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டிருக்கலாம்.

    'அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்', 'விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்த விவசாயச் சட்டம்', 'விவசாயிகளின் விளைபொருள் உத்தரவாதச் சட்டம்' ஆகிய மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து - தனது மேஜையில் வைத்துக் கொண்டு - ஊன்றிப் படித்துப் பார்த்துவிட்டு அல்லது அவற்றை அறிந்தோர் படிக்க, பக்கத்திலிருந்து கேட்டுவிட்டு, முதல்வர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும்.

    அவ்வாறு இல்லாமல் - யாரோ ஒருவர் எழுதிக் கொடுத்த அறிக்கையை வெளியிட்டு, 'விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என்று உணர்ந்து சட்டங்களை ஆதரித்ததாக'க் கூறியிருப்பது, அர்த்தமற்ற செய்கையின் உச்சக்கட்டம்!

    முதலில் அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தின் கீழ் 'இருப்பு வரம்பு' ஒழுங்குமுறைப்படுத்தவே கடும் நிபந்தனைகள் உள்ளன. அதாவது, 'தொடர்ந்து 12 மாதங்களுக்கு 100 சதவீத விலை உயர்வுக்குள்ளாகியுள்ள தோட்டக்கலைப் பொருட்களுக்கு மட்டுமே' இருப்பு வரம்பு (Stock Limit) நிர்ணயிக்க வேண்டும் என்ற 'நிபந்தனை' உள்ளது. அதேபோல் அழுகும் விவசாய விளைபொருட்களும், 12 மாதம் தொடந்து 50 சதவீத விலை உயர்வில் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.

    விலைவாசி உயரவில்லை என்றால் 'இருப்பு வைத்துக் கொள்வதில் எந்த கட்டுப்பாடும்' நிர்ணயிக்க முடியாது; ஒழுங்குமுறையும் செய்ய முடியாது. ஆகவே கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்களைப் பதுக்க வழி இருக்காது என்று முதல்வர் சொல்வது அப்பட்டமான பொய் மட்டுமல்ல; கார்ப்பரேட்டுகளின் வணிகச் சதிகளுக்கு வக்காலத்து வாங்கும் வஞ்சகமாகும்.

    'விவசாயிகளுக்கு விலை வீழ்ச்சி அடையாமல் உறுதியாக வருவாய் கிடைக்கும்' என்கிறார் முதல்வர். பண்ணை ஒப்பந்தம் போடும் போதே 'தரம், அளவு, விலை போன்றவற்றை விவசாயி உறுதி செய்ய வேண்டும்'; அந்த விளை பொருட்களை டெலிவரி கொடுக்கும் போது 'ஒப்பந்தப்படி தரமாக உள்ளது' என்று மூன்றாவது நபர் சான்றிதழ் அளிக்க வேண்டும் என்பதெல்லாம் ஒப்பந்த ஷரத்துகளாக இருக்கின்றன.

    இது 'கார்ப்பரேட்' நிறுவனங்களுக்கு எந்த வகையிலும் பாதகம் ஏற்பட்டு விடாமல் பாதுகாக்கவே தவிர - மழையிலும், புயலிலும் எல்லாக் காலங்களிலும் இன்னல்களால் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்க அல்ல, ஏன், தஞ்சாவூரில் உள்ள ஒரு விவசாயி - கார்ப்பரேட் நிறுவனத்துடன் போடும் ஒப்பந்தம் எப்படி இருக்க வேண்டும் (Model Agreement) என்பதை அரசு தயாரித்துக் கொடுக்கப் போவதில்லை; அதையே டெல்லிதான் கொடுக்கப் போகிறது. அது மத்திய அரசு சட்டத்திலேயே சொல்லப்பட்டுள்ளது என்பதை முதல்வர் படிக்கவில்லை போலும்.

    'உழவர் சந்தைக்கோ, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கோ பாதிப்பு இல்லை' என்கிறார் முதல்வர். ஆனால் இந்தச் சட்டங்கள் மாநிலங்களுக்கு இடையிலான வர்த்தகத்தை மட்டுமல்ல - மாநிலங்களுக்கு உள்ளே நடைபெறும் வர்த்தகத்தையும் கட்டுப்படுத்துகிறது.

    மத்திய அரசு கொண்டு வந்துள்ள 'விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டப் பிரிவு 14-ல்- 'மாநில அரசுகளின் வேளாண் விளைபொருட்கள் சந்தைப்படுத்துதலை ஒழுங்குபடுத்தும் சட்டங்களை 'மீறும்' அதிகாரம், மத்திய அரசின் இந்தச் சட்டங்களுக்கு இருக்கிறது' என்பதைப் படிக்கத் தவறி விட்டார்.

    முதல்வர். படித்து, எடுத்துச் சொல்லவும் அறிக்கை எழுதியவர் மறந்து விட்டார். ஆகவே மாநிலத்திற்குள் நடைபெறும் உழவர் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் அனைத்திற்குமே இந்தச் சட்டங்கள் ஆபத்தானவை.

    'விவசாயிகளுக்கு நிரந்தரக் கணக்கு எண் தேவையில்லை' என்று முதல்வர் கூறியிருக்கிறார். ஆனால் மேற்கண்ட சட்டத்தில் 'நிரந்தரக் கணக்கு எண் வைத்துள்ள எந்த நபரும்' (Any person) என்றுதான் இருக்கிறதே தவிர, முதல்வர் சொல்வது போல் 'விவசாயிக்கு - அல்லது விவசாய அமைப்புக்கு நிரந்தரக் கணக்கு எண் தேவையில்லை' என்று கூறவில்லை என்பதை பாவம் - முதல்வர் பார்க்கத் தவறி விட்டாரா அல்லது பார்த்ததை மறைக்க முயற்சி செய்கிறாரா?

    பஞ்சாப் எதிர்ப்பது, சந்தைக்கட்டணம் உள்ளிட்ட கட்டண வருவாய் பாதிப்பதால் என்று கூறும் முதல்வர், இவரே கூறுகின்ற அம்மா ஆட்சியின் 'தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் மற்றும் கால்நடை ஒப்பந்தப் பண்ணை மற்றும் சேவைகள்' சட்டம் மற்றும் வேளாண் விளை பொருட்கள் சந்தைப்படுத்துதல் ஒழுங்குபடுத்துதல் சட்டம் ஆகியவற்றின் கீழ் வசூல் செய்யப்படும் கட்டண வருவாய் குறித்து ஏன் கவலைப்படவில்லை? தமிழ்நாட்டிற்கும் நிதி இழப்பு ஏற்படும் என்று ஏன் வாதிடவில்லை? ஆகவே இதுவும், சட்டத்தை ஆதரித்து விட்டு - இப்போது விவசாயிகளின் எதிர்ப்பு வந்ததும் தப்பிக்க முயற்சித்து - முட்டுச் சந்தில் மாட்டிக் கொண்டு வழி தெரியாமல், விழி பிதுங்கி, திணறி நிற்கும் வாதம்.

    நான் இறுதியாகத் தெரிவிக்க விரும்புவது என்னவென்றால் - இந்த மூன்று சட்டங்கள் குறித்து நேற்றைய தினம் - ஆங்கில 'தி இந்து' நாளேட்டில் 'சந்தை தோல்வி' (Market Failure) என்று ஒரு தலையங்கம் எழுதப்பட்டுள்ளது. அதில் இந்த மூன்று சட்டங்களால் 'விவசாயிகளின் சந்தைச் சுதந்திரம் பறிபோகும். அவர்களின் விளை பொருட்களுக்குக் குறைந்தபட்ச விலை கிடைக்காது. மாநிலங்களில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் பாதிக்கப்படும்.

    பெரும்பான்மையாக உள்ள அமைப்பு சாரா சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை ஒழித்த பீகார் அரசின் நடவடிக்கை தோல்வியில் முடிந்து விட்டது' என்றெல்லாம் கடுமையாக எச்சரித்து விட்டு, உண்மையிலேயே வேளாண்துறை முன்னேற்றத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற அக்கறை மத்திய அரசுக்கு இருந்தால் - வேளாண்மை சம்பந்தப்பட்ட முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை தன்னிடம் குவித்துக் கொள்வதை விட- 'மாநிலங்களில் உள்ள வேளாண் விற்பனை ஒழுங்குமுறைக் கூடங்களை விரிவுபடுத்த மாநில அரசுகளுக்கு நிதியுதவி செய்ய வேண்டும்.

    விவசாய உட்கட்டமைப்பை வலுப்படுத்த உதவி செய்ய வேண்டும்' என்று கோடிட்டுக் காட்டியுள்ள பொருள் பொதிந்த விளக்கங்களையும்; 'டெக்கான் கிரானிக்கிள்' ஆங்கில நாளேடு, இந்தச் சட்டங்கள் 'பொன் முட்டையிடும் வாத்தைக் கொன்றுவிட எடுக்கப்படும் முயற்சியாகும்' என்று நேற்றைய தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதையும்; ஆற, அமர உட்கார்ந்து முதல்வர் பொறுமையாகப் படித்துத் தெரிந்து கொள்ளவும் - புரிந்துகொள்ளவும் வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    விவசாயிகள் கடனைத் தள்ளுபடி செய்ய மறுத்து - உச்சநீதிமன்றத்திற்கே சென்று தடை பெற்றவர், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தைக் கொண்டு வந்து விவசாயிகளின் நிலங்களைப் பறித்திடத் தீவிரம் காட்டுபவர், 'பி.எம். கிசான்' திட்டத்தில் 6 லட்சம் போலிகளைச் சேர்த்து, விவசாயிகள் வயிற்றில் அடித்தவர் - இன்றைக்கு விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கும் மூன்று சட்டங்களையும் ஆதரித்து விட்டு - கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் - விவசாயிகள் விரோத மத்திய பாஜக அரசுக்கும் சாமரம் வீசுவதையும்; தன்னை விவசாயி என்று கூறிக் கொள்வதையும்; வரலாறு மன்னிக்காது.

    ஆயிரம் முறை 'விவசாயி' என்று கூறிக்கொள்வேன் என்கிறார்; பள்ளியில் படிக்கும் மாணவன் தவறாக எழுதிவிட்ட சொல்லை ஆயிரம் தடவை சரியாக எழுதும்படி ஆசிரியர் தண்டித்ததைப்போல இருக்கிறது இவர் சொல்வது. இந்த காவிரிக் காப்பாளர் அல்ல; 'காவிரி ஏய்ப்பாளர்' போடும் 'கபட நாடகம்', இன்னும் ஆறு மாதங்களுக்கு வேண்டுமென்றால் ஊழல் வழக்குகளில் இருந்து 'பாஜகவின் பாதுகாப்பு' வளையத்திற்குள் நின்று தப்பித்துக் கொள்ள உதவலாம்; அதன் பிறகு மக்கள் எனும் மகேசன் தரப் போகும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது.

    முதலமைச்சரின் நேற்றைய 6 பக்க 'ஆதரவு அறிக்கையை' நிராகரிக்கும் வகையில் - இன்றைக்கு மூத்த அரசியல் தலைவரும், அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் இந்த வேளாண் சட்டங்களைக் கடுமையாக எதிர்த்துப் பேசியுள்ளார். 'மக்களவையில் ஆதரவு' 'மாநிலங்களவையில் எதிர்ப்பு' என்ற அதிமுகவின் நகைச்சுவைக்குப் பிறகு - இப்போது முதல்வரின் முன்பு இருப்பது ஒரேயொரு வழி.

    'என்னையும், எனது அமைச்சர்களையும் பாதுகாத்துக் கொள்ள உங்களைப் பலிபீடத்தில் ஏற்ற முயற்சி செய்து பார்த்தேன்' என்று, 'ஒப்புதல் வாக்குமூலம்' அளித்து - விவசாயப் பெருமக்களிடம் உடனடியாக மன்னிப்பு கேளுங்கள்! அதுதான் நீங்கள் வகிக்கும் பதவிக்கு அழகு! தற்காலிகப் பாதுகாப்புக் கவசம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×