search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை மின்நிலைய பயன்பாட்டை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.
    X
    துணை மின்நிலைய பயன்பாட்டை அமைச்சர் காமராஜ் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.

    விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தாது- அமைச்சர் காமராஜ்

    விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை தமிழக அரசு அமல்படுத்தாது என்று திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு மானிய நிதி வழங்குதல் மற்றும் புலம் பெயர்ந்து மீண்டும் சொந்த ஊர் திரும்பிய திறன் பெற்ற இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் கலந்து கொண்டு 9 பேருக்கு ரூ. 14 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். மேலும் 4 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையையும் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் ஆர்.காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டம் அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் தமிழகத்தில் தொடங்கப்படும் அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு அமல்படுத்தாது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை நிறைவேற்றாமல் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பாராளுமன்றத்தில் விவசாயம் தொடர்பாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

    இதில் ஒப்பந்த பண்ணைய திட்டம் என்பது சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அதன் பின்னர் குடியரசு தலைவர் ஒப்புதலோடு மசோதாவாக நிறைவேறியுள்ளது. வேளாண்மை பொருட்களை சந்தைப்படுத்துதல் ஏற்கனவே தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள திட்டம். இதன் மூலம் விவசாயிகள் விளைவிக்கும் பொருளை எங்கு வேண்டுமானாலும் கொண்டு சென்று விற்பனை செய்யலாம் என்ற நிலை நடைமுறையில் உள்ளது. உருளைக்கிழங்கு, வெங்காயம் போன்றவற்றை தேக்கிவைத்து விவசாயிகள் சற்று கூடுதல் விலை கிடைக்கும் போது விற்பனை செய்யலாம் என்கிற மசோதாவும் நிறைவேறியுள்ளது

    விவசாயிகளுக்கு எதிராக வணிகர்கள் விலை உயர்வை ஏற்படுத்தினால் அரசு தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற மசோதாவும் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாரத பிரதமர் கிசான் திட்டம், பிரதமர் வீடு கட்டும் திட்டம், கழிவறைகள் கட்டும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன. புகார்கள் மீது குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டு தவறு நடந்து இருக்கும்பட்சத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து ஆட்டம் முடியும் ஆறுமாதத்தில், விடியல் பிறக்கும் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறிய கருத்திற்கு பதில் அளித்த அமைச்சர் காமராஜ், மு.க.ஸ்டாலின் கூறுவது பகல் கனவாகவே முடியும். வருகிற சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியை அமைக்கும். தமிழகத்தில் இரு மொழி கொள்கை மட்டும்தான் கடைபிடிக்கப்படும் என முதல்-அமைச்சர் உறுதியாக கூறிவிட்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ராஜமூர்த்தி, உதவி கலெக்டர் பாலசந்திரன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதைப்போல நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் உள்ள துணை மின்நிலைய வளாகத்தில் ரூ.2 கோடியே 49 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பீட்டில் 11,033 கிலோ வாட் திறன் கொண்ட கூடுதல் துணை மின்நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையொட்டி கோவில்வெண்ணி துணை மின்நிலையத்தில் குத்துவிளக்கேற்றி, துணைமின்நிலைய பயன்பாட்டை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குத்து விளக்கேற்றி, துணைமின்நிலைய பயன்பாட்டை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணவேனி, உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, செயற்பொறியாளர்கள் ராதிகா, காளிதாஸ், உதவி செயற்பொறியாளர் அருள்ராஜ், நீடாமங்கலம் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆதிஜனகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×