search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அர்ஜூன்சம்பத்
    X
    அர்ஜூன்சம்பத்

    தமிழகத்தில் ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி மலரும்- அர்ஜூன்சம்பத் பேட்டி

    தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ரஜினிகாந்த் தலைமையில் ஆன்மிக ஆட்சி மலரும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார்.
    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்த பொன்னேரி, சின்ன மண்டலவாடியிலுள்ள இந்து மக்கள் கட்சி மாநில அமைப்பாளர் வி.கே.செல்வம் வீட்டில் இந்து மக்கள் கட்சியின் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை தொகுதிக்குட்பட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துகொண்டு பேசினார்.

    அப்போது வருகின்ற அக்டோபர் 2-ந் தேதி காந்தி பிறந்த தினத்தன்று ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் ஆன்மீக அரசியல் மாநாடு நடைபெற உள்ளது. இதில் தொகுதிக்கு 3 பேர் வீதம் தமிழகத்திலிருந்து இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள். இந்த மாநாட்டில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து, காவடி பேரணியை வெற்றிபெற செய்ய வேண்டும். திராவிட அரசியல் கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் மாநில செயலாளர் எம்.பி.ரமேஷ், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.கே.ரமேஷ், மாவட்ட செயலாளர் சபரி, அமைப்பாளர் ரவி, பொதுச்செயலாளர் சஞ்சய் ராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது தமிழகத்தில் ஆன்மிக அரசியலை முன்னெடுத்து நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் 234 தொகுதிகளிலும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று ஆன்மிக அரசியல் ஆட்சி மலரும். இதற்கு இந்து மக்கள் கட்சி அவரை ஆதரிக்கும். இனிவரும் காலங்களில் திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தை ஒழித்து, பா.ஜ.க. வெகு சிறப்பான ஆட்சியை நடத்தும் என்றார்.

    அதைத்தொடர்ந்து அர்ஜூன்சம்பத் ஆம்பூரில் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க.வினர் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மக்களின் பிரச்சினைகளை பேசாமல் ‘நீட்’ தேர்வை பேசி உடனடியாக வெளிநடப்பு செய்தனர். இந்தியாவின் பொருளாதாரம் கொரோனாவிற்கு பிறகு மீண்டு எழும் சூழல் வந்து இருக்கிறது. சீனாவில் இருக்கின்ற தொழில் நிறுவனங்கள் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் வருகிற வாய்ப்புகள் இருக்கின்றன என்றார்.

    அப்போது இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் ரமேஷ், குமரன், கோபிநாதன் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
    Next Story
    ×