search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரிந்த ஆண் யானை இறந்தது

    கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரிந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.
    மேட்டுப்பாளையம்:

    கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம் சுண்டப்பட்டி பிரிவு நெல்லித்துறை காப்புக்காடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் முதல் 20 வயது மதிக்கத்தக்க ஆண் யானை இடது முன்னங்கால் வீக்கம் மற்றும் உடலில் ஆங்காங்கே காயங்களுடன் சுற்றி திரிந்தது.

    இதுபற்றி அறிந்த வனத்துறையினர் அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவ குழுவின் பரிந்துரைபடி மாத்திரைகளை பொடியாக்கி உணவு உருண்டையில் கலந்து யானை சென்று வரும் இடங்களில் வீசினர்.

    மேலும் யானையை நடமாட்டத்தை கண்காணிப்பு கேமிரா மூலமும் கண்காணித்து வந்தனர். கடந்த 9-ந் தேதி ஒடந்துறை காப்புக்காடு பகுதியில் யானை சுற்றி திரிவது தெரியவரவே யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக அரசு கால்நடை மருத்துவ அலுவலர் சுகுமார் தலைமையில் வல்லுனர்கள் அடங்கிய சிறப்பு குழுவும் அமைக்கப்பட்டது.

    அவர்கள் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக தொடங்கினர். மேலும் யானைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு உதவியாக சாடிவயல் யானை முகாமில் இருந்து சுயம்பு, வெங்கடேஷ், ஆனைமலை யானைகள் முகாமில் இருந்து கலீம் என்ற கும்கி யானை என 3 யானைகள் வரவழைக்கப்பட்டன.

    ஆனால் யானை நெல்லி துறை காப்புக்காட்டின் மலைப்பாங்கான நிலப்பகுதிக்குச் சென்றுவிட்டது.

    அங்கு சாதகமற்ற நிலப்பரப்பு காரணமாக ஏற்படும் அபாயங்கள் மற்றும் பாறை நிலப்பரப்பில் காலில் இருக்கும் காயம் காரணமாக யானைக்கு மயக்க மருந்து செலுத்தினால் நிற்பது சிரமம். எனவே யானை சமதள பகுதிக்கு வந்ததும் மயக்க ஊசி செலுத்தி பிடித்து சிகிச்சை அளிக்க முடிவு செய்தனர். தொடர்ந்து யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணி அளவில் நீலகிரி மலை கீழ் சரிவு உள்ளடக்கிய நெல்லிதுறை காப்புக் காட்டின் எல்லையிலிருந்து 3.5 கிலோமீட்டர் தொலைவில் வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு காயத்துடன் சுற்றி திரிந்த யானை இறந்த நிலையில் கிடந்தது.

    காயத்துடன் சுற்றி திரிந்த யானை இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்துள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக யானை சுற்றி திரிந்த பகுதியில் சேறும், சகதியுமாக காணப்பட்டது.

    இந்த பகுதி மலைப்பாங்கான பகுதி என்பதால் இந்த யானை வழுக்கி கீழே விழுந்து விட்டது. திரும்ப எழுந்திருக்கும் போது சுமார் 15 அடி தூரம் சறுக்கி விழுந்து இறந்து விட்டது.

    இறந்த யானைக்கு ஏற்கனவே காலில் பலத்த காயம் இருந்தது. மேலும் யானைகளுடன் நடந்த மோதலில் அடி வயிறு மற்றும் தோள்பட்டையில் தந்தங்களால் ஏற்பட்ட காயமும் இருந்தது. இறந்த யானையின் உடல் இன்று காலை வனத்துறையினர் முன்னிலையில் கால்நடை டாக்டர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×