search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தான் எழுதிய புத்தகத்துடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
    X
    தான் எழுதிய புத்தகத்துடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

    அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க தமிழகத்தில் பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும்- ராமதாஸ்

    தமிழகத்தில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்று நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எழுதிய, ‘சுக்கா..., மிளகா..., சமூகநீதி?’ என்ற புத்தக வெளியிட்டு விழா அவரது முன்னிலையில் அக்கட்சி தலைவர் ஜி.கே.மணி தலைமையில் இணையதளம் வாயிலாக நேற்று நடைபெற்றது.

    இந்த புத்தகத்தை பா.ம.க. அரசியல் ஆலோசனைக்குழு தலைவர் பேராசிரியர் தீரன் வெளியிட, தியாகி தட்டானோடை செல்வராஜ் பெற்றுக்கொண்டார். பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் முத்துகிருஷ்ணன், அசோக்குமார், வெளியீட்டாளர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    விழாவில் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

    அனைவருக்கும் முழுமையான சமூகநீதி கிடைக்க சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. வன்னியர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் மக்கள்தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

    தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினருக்கும் அனைத்திலும் சமவாய்ப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். அதற்காக தமிழ்நாட்டில் சமவாய்ப்பு ஆணையம் என்ற அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அப்போது தான் அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும்.

    அனைத்து தரப்பினருக்கும் முழுமையான சமூக பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் பா.ம.க. ஆட்சிக்கு வர வேண்டும்.

    வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நான், டாக்டர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி போன்றவர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதுகுறித்து இதுவரை அரசாங்கம் நம்மை அழைத்து பேசவில்லை. இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் இப்படி நாம் கேட்டுக்கொண்டே இருப்பது?.

    தமிழ்நாட்டில் மக்கள் தான் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் மனமாற்றம் வந்தால் நமது நிலை முன்னேறும். கல்வி, சமூகம், பொருளாதாரம் உள்ளிட்ட எல்லா கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். அதற்காக பா.ம.க.வுக்கு தமிழக மக்கள் ஒருமுறை வாய்ப்பு அளிக்க வேண்டும்.

    தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல டாக்டர் அன்புமணி ராமதாஸ் சிறப்பான பல திட்டங்களை வைத்திருக்கிறார். அவற்றை தொகுதி அளவிலும், கிராம அளவிலும், வீடுவீடாகவும் கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு கொண்டு செல்வதன் மூலம் மக்களிடம் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×