search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ்
    X
    தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ்

    முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்- 46,790 பேரிடம் ரூ.51 லட்சம் வசூல்

    முக கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் என 46,790 பேரிடம் ரூ.51 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்தார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசின் உத்தரவுப்படி தஞ்சை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. ஆங்காங்கே காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு வழிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வட்ட அளவில் 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுக்கள் மூலம் வணிக வளாகங்களில் இயங்கி வரும் கடைகள், உணவகங்கள் மற்றும் சிறுகடைகளில் பொதுமக்களால் சமூக இடைவெளி பின்பற்றப்படுகிறதா? எனவும், கடை பணியாளர்கள் முக கவசம் அணிந்து பணிபுரிகிறார்களா? எனவும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கண்காணிப்பை அதிகப்படுத்தும் வகையில் கூடுதல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணி அதிகப்படுத்தப்பட்டுள்ளது. கும்பகோணம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும்படையினர் ஆய்வு செய்ததில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டநெரிசலுடன் கடைகள் இயங்கி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து 5 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 11-ந் தேதி வரை கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத 46 ஆயிரத்து 599 பேரிடம் இருந்து ரூ.50 லட்சத்து 60 ஆயிரத்து 600 அபராதம் வசூலிக்கப்பட்டது. 12-ந் தேதி முதல் இதுவரை 191 பேரிடம் இருந்து ரூ.39 ஆயிரத்து 400 வசூலிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு இடையூறாக இருப்பவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×