search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    நாகர். அருகே குளத்தில் குதித்து தற்கொலை செய்த தாய்-மகளின் உடலை அடக்கம் செய்த போலீசார்

    குடும்ப வறுமையில் குளத்தில் குதித்து தற்கொலை செய்த தாய்-மகளின் உடலை அடக்கம் செய்ய உறவினர்கள் வராததால் போலீசாரே அடக்கம் செய்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியை சேர்ந்தவர் வடிவேல்முருகன் (வயது78). இவரது மனைவி பங்கஜம் (70). இவர்களது மகள்கள் மாலா(46), சச்சு(45).

    வடிவேல் முருகன் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். போதிய வருமானம் இல்லாததால் அவரது குடும்பம் வறுமையில் வாடி வந்தது. தினமும் சாப்பாட்டிற்கு வழியின்றி சிரமத்துடன் வாழ்ந்துள்ளனர். கடும் வறுமை காரணமாக மகள்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடியவில்லை.

    இதற்கிடையே வடிவேல்முருகனுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு காலில் அடிபட்டது. அந்த காயம் குணமாகாததால் அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. அவர் வேலைக்கு செல்லாததால் வருமானம் முற்றிலும் இல்லாமல் போனது. தினமும் தண்ணீர் குடித்து பசியை போக்கியபடி இருந்துள்ளனர்.

    இந்த நிலையில் வீட்டில் படுத்தபடுக்கையாக இருந்த வடிவேல் முருகன் நேற்று முன்தினம் திடீரென இறந்து விட்டார். இதையடுத்து அவரது உடல் அருகே அமர்ந்து மனைவி மற்றும் 2 மகள்களும் வெகுநேரம் அழுதபடி இருந்துள்ளனர்.

    வடிவேல் முருகனின் உடலை அடக்கம் செய்யக் கூட வழி இல்லாமல் அவரது மனைவி மற்றும் மகள்கள் தவித்தனர். இறுதியில் தாங்களும் தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தனர். இதையடுத்து வடிவேல் முருகனின் உடலை வீட்டினுள் வைத்து பூட்டி விட்டு வெளியே சென்றனர்.

    அவர்கள் நாகர்கோவில் அருகே சுசீந்திரம் நல்லூரில் உள்ள இளையநயினார் குளத்திற்கு இரவோடு இரவாக நடந்து சென்றனர். பின்பு 3 பேரும் தங்களது கைகளை இணைத்து கட்டிக் கொண்டு குளத்திற்குள் குதித்தனர்.

    அவர்கள் 3 பேரும் குளத்தில் மிதந்ததை நடை பயிற்சிக்கு சென்றவர்கள் பார்த்து சுசீந்திரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உடனே போலீசார் விரைந்து வந்து குளத்தில் கிடந்த 3 பேரையும் மீட்டனர். அவர்களில் பங்கஜம் மற்றும் மாலா ஆகிய இருவரும் இறந்து விட்டனர்.

    உயிருக்கு போராடியபடி இருந்த சச்சுவை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் போலீசார் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய், தந்தை, சகோதரி ஆகியோர் இறந்து விட்ட நிலையில் தன்னையும் கொன்று விடுமாறு மருத்துவர்களிடம் கதறினார்.

    தங்களது குடும்பம் வறுமையில் வாடியது குறித்து அவர் தெரிவித்த தகவல்கள் ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்சுகள் மற்றும் விசாரணை நடத்திய போலீசார் என அனைவரையும் கவலை அடையச்செய்தது. பல மாதங்களாக சாப்பிடக்கூட வழியில்லாமல் தவித்த அவர்களை உறவினர்கள் கண்டு கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

    வீட்டில் இறந்துகிடந்த வடிவேல்முருகன், குளத்தில் குதித்து தற்கொலை செய்த பங்கஜம் மற்றும் அவரது மகள் மாலா ஆகிய 3 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. பங்கஜம் மற்றும் மாலாவின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    அவர்களது உடலை பெற்றுக் கொள்ள உறவினர்கள் யாரும் வர வில்லை. மேலும் சச்சுவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்ததால் இருவரது உடலையும் என்ன செய்வது என்று போலீசார் தவித்தனர். பின்பு இருவரின் உடலையும் தாங்களே அடக்கம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி பங்கஜம் மற்றும் மாலாவின் உடலை தனித்தனி சவப்பெட்டிகளில் வைத்தனர். அதனை ஆண்டார்குளம் பகுதிக்கு போலீசார் கொண்டு சென்றனர். அங்கு பெரிய குழி தோண்டி இருவரது உடலையும் ஒரே குழியில் போலீசாரே அடக்கம் செய்தனர்.

    வடிவேல் முருகனின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை பெற்றுக்கொள்ளவும் உறவினர்கள் யாரும் வரவில்லை. ஆகவே அவரது உடலையும் தாங்களே அடக்கம் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×