search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ராஜாக்கமங்கலம் துறையில் மீனவர் கொலை- கைதான 4 பேர் ஜெயிலில் அடைப்பு

    ராஜாக்கமங்கலம் துறையில் மீனவர் கொலை சம்பவத்தில் கைதான 4 பேர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    நாகர்கோவில்:

    ராஜாக்கமங்கலம் துறை சவேரியார் தெருவை சேர்ந்த மீனவர் அருள்தாசன் (வயது59). அருள்தாசனும், அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த பிரகாஷ் என்பவரும் நேற்று முன்தினம் இரவு ராஜாக்கமங்கலம் துறை கடற்கரையில் அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது சில பெண்களை பற்றி பிரகாஷ் அவதூறாக பேசினார். அதற்கு அருள்தாசன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரகாசை அருள் தாசன் தாக்கினார்.

    அந்த நேரத்தில் அதே பகுதியில் அமர்ந்து மது குடித்துக்கொண்டிருந்த சகோதரர்கள் ராஜன், ஜாண் சன் மற்றும் நெஸ்கோ, தோரி ஜாண் ஆகிய 4 பேரும் பிரகாசுக்கு ஆதரவாக அருள்தாசனை கண்டித்தனர். இதையடுத்து அவர்களுக் கிடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

    அதில் ஆத்திரமடைந்த ராஜன், அருள்தாசன் மற்றும் அவருடைய தம்பி தேவதாசன் ஆகிய இருவரையும் கத்தியால் குத்தினார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதனை பார்த்த ராஜன் உள்ளிட்ட 4 பேரும் தப்பியோடிவிட்டனர்.

    கத்திக்குத்து காயம் அடைந்த சகோதரர்கள் இருவரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களை டாக்டர்கள் பரிசோதித்த போது அருள் தாசன் இறந்துவிட்டது தெரியவந்தது.

    அவரது சகோதரர் தேவதாசன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மீனவர் கொலை செய்யப் பட்ட சம்பவத்தால் ராஜாக்கமங்கலம் துறை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு கன்னியாகுமரி துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் மீனா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    கொலை தொடர்பாக வழக்கு பதிந்து விசாரணை நடத்திய ராஜாக்கமங்கலம் போலீசார், ராஜன், ஜாண்சன், நெஸ்கோ, தோரி ஜாண் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் குடி போதையில் ஏற்பட்ட தகராறில் மீனவர் அருள்தாசன் குத்தி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

    கைதான 4 பேரும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 4 பேரும் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    Next Story
    ×