search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க நாளுக்குநாள் அதிகரித்து வரும் போலி டாக்டர்கள்

    கொரோனாவிற்கு சிகிச்சை என்ற பெயரில் போலி டாக்டர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்க விளைவுகளால் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    ராமநாதபுரம்:

    முறையான மருத்துவம் படிக்காமலும், மாற்று மருத்துவம் என்ற பெயரில் ஆங்கில மருத்துவம் பார்ப்பதும், மருந்து கடைகள் மற்றும் ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பவர்கள் பழக்கத்தின் அடிப்படையில் ஆங்கில மருத்துவம் பார்க்கும் போலி டாக்டர்கள் எண்ணிக்கை அனைத்து பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தெருவுக்கு ஒரு போலி டாக்டர்கள் இருப்பது போன்ற நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக கொரோனா பரவலை பயன்படுத்தி ராமநாதபுரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களிலும், நகரில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் போலி டாக்டர்கள் தங்களின் அனுபவ மருத்துவ அறிவை பயன்படுத்தி சர்வசாதாரணமாக மக்களை பதம்பார்த்து 
    வருகின்றனர்.

    கொரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் உரிய அங்கீகாரம் பெற்ற தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக கொரோனா அறிகுறிகளுடன் வந்தால் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு உரிய மருத்துவம் படித்த டாக்டர்கள் திட்டவட்டமாக கூறி அனுப்பி விடுகின்றனர்.

    இதனால் காய்ச்சல், உடல்வலி, இருமல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் கொரோனா அச்சம் காரணமாக பரிசோதனை செய்ய தயங்கி தங்களுக்கு எந்த தயக்கமும் இல்லாமல் சிகிச்சை அளிக்கும் போலி டாக்டர்களை தேடி சென்று சிகிச்சை பெறுகின்றனர். இதுபோன்றவர்களை போலி டாக்டர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி சிகிச்சை அளித்து அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர்.

    இதனால் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள், ஆஸ்பத்திரி பணியாளர்கள் மற்றும் மருத்துவம் பயிலாத பிற மருத்துவம் சார்ந்த இதர பயிற்சி பெற்றவர்கள் என அனைவரும் தற்போது கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்களாகி விட்டனர். 

    முறையான மருத்துவம் படிக்காமல் அவர்கள் அறிந்த அனுபவத்தின் அடிப்படையில் பக்கவிளைவுகள் உள்ள அதிக சக்தி வாய்ந்த மருந்துகளை கூட சர்வ சாதாரணமாக கொடுத்து வருகின்றனர். குறிப்பாக வலி நிவாரணி, உயிர்காக்கும் ஸ்டீராய்டு மருந்துகள் போன்றவற்றை மாத்திரைகளாகவும், ஊசிகளாகவும் போட்டு மக்களின் உயிரை கொஞ்சம் கொஞ்சமாக பறித்து 
    வருகின்றனர். 

    தடைசெய்யப்பட்ட மருந்துகளை எடுத்துக்கொண்ட பலருக்கு தற்போது சிறுநீரக கோளாறு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில நாட்களில் மட்டும் இதுபோன்ற போலி டாக்டர்களால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுநீரக பாதிப்பு அதிக அளவில் ஏற்பட்டுள்ளதாக மருத்துவதுறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கு காரணம் பக்கவிளைவுகள் உள்ள தடைசெய்யப்பட்ட மருந்துகளை போலி டாக்டர்களின் பரிந்துரையின் அடிப்படையில் நோயாளிகள் எடுத்துக்கொண்டது முக்கிய காரணமாக கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், காவல்துறையுடன் இணைந்து மருத்துவ குழவினரை அனுப்பி மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தி போலி டாக்டர்களை கைது செய்ய வேண்டும் என்றும், கொஞ்சம் கொஞ்சமாக உயிரை தொலைத்துவரும் மக்களை காப்பாற்ற வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×