search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    மாற்றுத்திறனாளிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தகவல்

    தர்மபுரி மாவட்டத்தில் தனித்தேர்வுகளை எழுதும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தெரிவித்து உள்ளார்.
    தர்மபுரி:

    தர்மபுரி மாவட்டத்தில் 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு, எஸ்.எஸ்.எல்.சி. பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கான துணைத்தேர்வு மற்றும் டிப்ளமோ தேர்வுகளை மாற்றுதிறனாளி தனித்தேர்வர்களும் எழுத உள்ளனர். சொல்வதை எழுதுபவர் சலுகை கோரிய மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்களுக்கு தேர்வு மையத்திற்கு செல்வதற்கு முன்பே மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

    இதன்படி சொல்வதை எழுதுபவர் சலுகை கோரி விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு முன்னர் தங்கள் விருப்பப்படி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். இந்த பரிசோதனையை செய்து கொள்வதில் ஏதேனும் சிரமம் இருந்தால் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை வருகிற 15-ந்தேதி (செவ்வாய்க் கிழமை)க்குள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா பரிசோதனையை கட்டாயமாக செய்து கொண்டு தொற்று இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழை தேர்வு மையத்திற்கு எடுத்து வருபவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.

    இதேபோல் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர்களாக நியமனம் செய்யப்படும் அனைத்து ஆசிரியர்களுக்கும் வருகிற 17-ந்தேதி மற்றும் 18-ந்தேதி ஆகிய 2 நாட்களில் மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக செயல்பட்டு வரும் நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனத்தின் மூலம் பரிசோதனை நடத்த மாவட்ட கல்வித்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. பரிசோதனையின் முடிவில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    தேர்வு எழுத வரும் அனைத்து தேர்வர்களும் சமூக இடைவெளியை கடைபிடித்து முககவசம் அணிந்து வர வேண்டும். முககவசம் அணிந்து தேர்வெழுத இயலாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி தேர்வர்கள் மற்றும் சொல்வதை எழுதுபவர் ஆகியோரை தெளிவாக கேட்டு புரிந்து கொள்ளும் அளவிற்குரிய சமூக இடைவெளியுடன் அமர வைக்கவும் தேர்வு மையத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×