search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போராட்டம்
    X
    போராட்டம்

    கரூரில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டம்

    கரூரில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கரூர்:

    கரூர் சின்னாண்டாங்கோவில் மேட்டுத் தெருவில் 70-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள சாலையில் இருந்து பாரி நகர், பஸ் நிலையம் செல்ல மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சாலை அமைக்கப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகிறது. தற்போது விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் இந்த மண் சாலை சேறும், சகதியுமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்தநிலையில் இந்த சாலை வழியாக பாரி நகர், மகாத்மா நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமராவதி ஆற்றில் ரூ.78 லட்சம் மதிப்பில் கிணறு மற்றும் குழாய் அமைத்து குடிநீர் எடுத்துச் செல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்போது சாலையில் அமைக்கப்பட்ட குழாய்கள் கீழே இறங்கி பள்ளம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்ய ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி சார்பில் நேற்று 2 பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன.

    இதனை பார்த்து ஆத்திரமடைந்த பொதுமக்கள், சாலையை சீரமைத்தால்தான் பள்ளம் தோண்ட அனுமதிப்போம் எனக் கூறி பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கரூர் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார், ஊராட்சி செயலர் சசிகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்ததன்பேரில் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
    Next Story
    ×