search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    இரு தரப்பினர் இடையே மோதல் வழக்கில் மேலும் 2 பேர் கைது - சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

    குளித்தலை அருகே நேற்று முன்தினம் இருதரப்பினர் மோதிக்கொண்ட வழக்கில், மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    குளித்தலை:

    வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளையொட்டி, குளித்தலை அருகே தாளியாம்பட்டியில் உள்ள வ.உ.சி சிலைக்கு, கரூர் மாவட்டம் மாயனூர், லாலாபேட்டை உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த பலர் நேற்று முன்தினம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள் திருச்சி செல்வதற்காக குளித்தலை அருகேயுள்ள கீழகுட்டப்பட்டி வழியாக வாகனங்களில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கும் கீழகுட்டப்பட்டியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    இதுகுறித்து இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், இருதரப்பைச் சேர்ந்த தலா 8 பேர் வீதம் மொத்தம் 16 பேர்கள் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஒரு தரப்பினைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் இந்த மோதல் தொடர்பாக கீழகுட்டப்பட்டியை சேர்ந்த மேலும் சிலரை போலீசார் நேற்று முன்தினம் இரவும் கைது செய்துள்ளனர்.

    இதை கண்டித்து அப்பகுதி மக்கள், குளித்தலை-மணப்பாறை சாலையில் கோட்டமேடு அருகே உள்ள நால்ரோடு பகுதியில், நேற்று காலை சுமார் 8 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த குளித்தலை வட்டாட்சியர் முரளிதரன், போலீஸ் துணை சூப்பிரண்டு சசீதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் குளித்தலை - மணப்பாறை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தநிலையில் நேற்று முன்தினம் கீழகுட்டப்பட்டியில் நடந்த மோதல் வழக்கு தொடர்பாக, இப்பகுதியை சேர்ந்த மகேஷ்வரன் (வயது 20) , சுரேந்தர் (19) ஆகிய இருவரையும் குளித்தலை போலீசார் கைதுசெய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×