search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்ஷ் போத்ரா
    X
    ஹர்ஷ் போத்ரா

    14 கிலோ நகையை திருடியதாக கடை உரிமையாளரின் மகன் கைது

    கள்ளச்சாவி போட்டு திறந்து 14 கிலோ நகையை திருடியதாக கடை உரிமையாளரின் மகன் கைதானார். ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் அடைந்ததால் அதை சமாளிக்க திருடியதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
    பெரம்பூர்:

    சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சோப்ரா (வயது 42). இவரும், கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த சுபாஷ்சந்த் போத்ரா(45) என்பவரும் இணைந்து, சவுகார்பேட்டை என்.எஸ்.சி.போஸ் சாலை வீரப்பன் தெருவில் தங்க நகைகள் மொத்த வியாபாரம் செய்யும் கடை நடத்தி வருகின்றனர்.

    செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை என வாரத்தில் 2 நாட்கள் மட்டும் இந்த கடையை திறந்து வியாபாரம் செய்வது வழக்கம். கடந்த மாதம் 21-ந் தேதி கடையில் வியாபாரத்தை முடித்துவிட்டு பூட்டிச் சென்றனர். மீண்டும் 25-ந்தேதி கடையை திறந்து பார்த்தபோது, லாக்கரில் இருந்த 14 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி யானைக்கவுனி போலீசில் புகார் செய்தனர். ஆனால் கடை மற்றும் லாக்கர் பூட்டுகள் உடைக்கப்படாததால் கள்ளச்சாவி போட்டு நகையை திருடியது தெரிந்தது. போலீசார் தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரித்து வந்தனர்.

    அதில் சம்பவம் நடந்த அன்று நகைக்கடை உரிமையாளர்களில் ஒருவரான சுபாஷ்சந்த் போத்ராவின் மகன் ஹர்ஸ் போத்ரா(24) என்பவர் பெரிய பையுடன் அந்த பகுதியில் சுற்றித்திரிந்தது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்ததில், 14 கிலோ நகையை திருடியதை ஒப்புக்கொண்டார். ஆன்லைன் வர்த்தகத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அதை சமாளிக்கவே கள்ளச்சாவி போட்டு கடை மற்றும் லாக்கரை திறந்து நகையை திருடியதாக போலீசாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 11.5 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×