search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.3 ஆயிரம் கோடியில் புதிய திட்டம்

    சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.3 ஆயிரம் கோடியில் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சென்னை நகருக்கு அடுத்த 5 ஆண்டுகளில் ஏற்படும் குடிநீரின் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் மில்லியன் கன அடி நீரை சேமிக்க கூடுதல் வசதி அவசியமாக இருக்கிறது. இதற்காக பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை ரூ.3 ஆயிரம் கோடி திட்டத்துக்கான மதிப்பீடுகளை தயாரித்து வருகிறது. இந்த திட்டத்துக்கு தேவையான நிதியை உலக வங்கியிடம் பெறுவதற்கான நடவடிக்கையும் விரைவில் இறுதி செய்யப்பட உள்ளது.

    தடுப்பணைகள் மற்றும் அணைகளின் மேற்பரப்பில் உள்ள கட்டிட கட்டமைப்புகளை சீரமைப்பதும், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த கட்டமைப்புகள் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதுடன், வறட்சியின் போது வயல்களில் உள்ள கிணறுகளில் இருந்து தண்ணீர் பெறவும் உதவும். கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கட்டமைப்புகள் நீர் சேமிக்கவும் உதவிகரமாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பொதுப்பணித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    அடுத்த 30 ஆண்டுகளில் நீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்யும் திட்டங்களை பொதுப்பணித்துறை உருவாக்கி வருகிறது. புதிய திட்டங்கள் மூலம் சென்னையை சுற்றி உள்ள 60 நீர்நிலைகளின் சேமிப்பு திறனை மேம்படுத்துவதோடு, நீர்நிலைகளில் மாசு ஏற்படுவதை குறைப்பதற்கான தீர்வையும் கொடுக்கும். சென்னையின் நீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக உபரி நீரை மற்ற நீர் படுகைகளிலிருந்து மாற்றுவதற்கான திட்டங்களும் தயாரிக்கப்படுகின்றன.

    உதாரணமாக பாலாற்றில் இருந்து செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு அதிகப்படியான தண்ணீரை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டங்கள் மூலம் ஆரணியாறு மற்றும் கொசஸ்தலையாறு ஆகியவற்றில் கடல் நீர் ஊடுருவல் பிரச்சனையும் தீர்க்கப்படும். உலக வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட திட்ட செலவில் சுமார் 30 சதவீதம் முதல் கட்ட பணிக்கு ஒதுக்கப்படும். இந்த திட்டங்களை 5 ஆண்டுகளில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×