search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் கேபி அன்பழகன்
    X
    அமைச்சர் கேபி அன்பழகன்

    ‘அரியர்’ மாணவர்கள் தேர்ச்சியை ஏற்க மறுப்பா?- அமைச்சர் கே.பி. அன்பழகன் விளக்கம்

    அரியர் மாணவர்கள் தேர்ச்சியை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஏற்க மறுத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாக துணைவேந்தர் கூறியது தொடர்பாக அமைச்சர் கே.பி.அன்பழகன் விளக்கம் அளித்து உள்ளார்.
    சென்னை:

    கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் காரணமாக கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என்ஜினீயரிங் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்த முடியாமல் போனது.

    இதனால் இறுதி செமஸ்டர் தேர்வை தவிர மற்ற செமஸ்டர் தேர்வுகளில் இருந்து மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கான மதிப்பெண் முந்தைய செமஸ்டர் தேர்வுகளின் அடிப்படையிலும், உள்மதிப்பீடு அடிப்படையிலும் கணக்கிடப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

    இந்த நிலையில் ‘அரியர்’(தேர்ச்சி பெறாமல் பாக்கி வைத்திருக்கும் பாடங்கள்) வைத்திருக்கும் மாணவர்களுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    அதை பரிசீலித்த தமிழக அரசு, கல்லூரி தேர்வுகளில் அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், அந்த தேர்வுகளை எழுதுவதற்காக கட்டணம் செலுத்தி இருக்கும் பட்சத்தில் அந்ததேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடிவுசெய்து, அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. அதாவது அரியர் வைத்திருக்கும் பாடங்களுக்கான தேர்வு கட்டணத்தை செலுத்தி இருந்தாலே அவர்கள் அந்த பாடங்களில் தேர்ச்சி பெற்றதாக அர்த்தம். இதனால் கலை மற்றும் அறிவியல், என்ஜினீயரிங் படிப்புகளில் அரியர் வைத்திருந்த ஏராளமான மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால், இந்த அறிவிப்பை கொண்டாடி மகிழ்ந்தனர்.

    தமிழக அரசின் அறிவிப்பால், அரியர் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மகிழ்ச்சியில் இருந்து மாணவர்களுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்(ஏ.ஐ.சி.டி.இ.) அனுப்பி இருக்கும் ஒரு தகவல் பெரும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்து உள்ளது.

    இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் மின்னஞ்சல் மூலம் ஒரு கடிதம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என்றும், அவர்களுக்கு தேர்வு நடத்தித்தான் பட்டம் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    அரியர் தேர்வில் விலக்கு பெற்று மகிழ்ச்சியில் திளைத்த மாணவர்களுக்கு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் இந்த அறிவிப்பு பேரிடியாக அமைந்து உள்ளது.

    அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்ட இந்த கடிதம் குறித்து பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவிடம் கேட்டபோது, “பல்கலைக்கழகத்தின் மின்னஞ்சல் வாயிலாக இந்த கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக எந்த முடிவையும் நாங்கள் எடுக்க முடியாது. அரசுதான் இதுகுறித்து ஆலோசித்து இறுதி முடிவு செய்யும்” என்று தெரிவித்தார்.

    என்ஜினீயரிங் படிப்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சியை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஏற்க மறுத்து, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி இருப்பதாக துணைவேந்தர் சூரப்பா கூறியது பற்றி உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர்.

    அதற்கு விளக்கம் அளித்து அவர் கூறியதாவது:-

    அதுபோல் கடிதம் எதுவும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் அனுப்பவில்லை. அரசு எடுக்கும் முடிவுகளை 13 பல்கலைக்கழக வேந்தர்களில், இவர் ஒருவர் மட்டும் ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறார்.

    கடந்த 31.8.2020 அன்று பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின்படிதான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்த விதிமுறைகளை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்து விட்டது. அப்படி இருக்கும்போது எப்படி மறுப்பு தெரிவித்து இருக்கும்?

    மின்னஞ்சலில் கடிதம் வந்ததாக கூறும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர், அதை அரசுக்கு அனுப்பவில்லை. அப்படி ஒரு கடிதமும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×