search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது நாளான நேற்று தினேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள்.
    X
    2-வது நாளான நேற்று தினேஷ்குமாரை தேடும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு நிலைய வீரர்கள்.

    காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் கதி என்ன? 2 நாட்கள் தேடியும் பலன் இல்லை

    தவிட்டுப்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய வாலிபரின் கதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரை 2 நாட்கள் தேடியும் பலன்அளிக்கவில்லை.
    நொய்யல்:

    கரூர் மாவட்டம், மணவாடி மங்கை நகரை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் தினேஷ்குமார்(வயது 26). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவர், தனது நண்பர்கள் கோபி(23), ராபின்குமார்(25), பாலுசாமி(19), சதீஸ்குமார்(20), நந்தகுமார்(25), ராஜா(23), சங்கர்(20) ஆகிய 7 பேருடன் கரூர் அருகே உள்ள தான்தோணிமலை பெருமாள் கோவிலுக்கு நேற்று முன்தினம் நடைபெற்ற தனது நண்பர் ஜீவானந்தத்தின் திருமணத்திற்கு வந்திருந்தார்.

    பின்னர் திருமணம் முடிந்ததும், அனைவரும் 4 மோட்டார் சைக்கிள்களில் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக நேற்று முன்தினம் மதியம் 2.30 மணியளவில் சென்றனர். அங்கு அனைவரும் காவிரி ஆற்றில் இறங்கி மகிழ்ச்சியுடன் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது தினேஷ்குமாரை மட்டும் காணவில்லை. இதனால், பதற்றம் அடைந்த அவரது நண்பர்கள் அவரை நாலாபுறமும் சென்று தேடிப்பார்த்தனர். நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    பின்னர், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் இறங்கி தினேஷ்குமாரை தேடினர். பரிசல் மற்றும் ரப்பர் படகுகள் மூலம் நீண்ட தூரம் சென்றும் தேடினர். இரவு 8 மணி வரை தேடிப் பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது இருட்டி விட்டதால் தேடும் பணி அத்துடன் நிறுத்தப்பட்டது.

    நேற்று காலை 2 பிளாஸ்டிக் படகுகள் மூலம் தீயணைப்பு வீரர்கள் வாங்கல் வரை சென்று மாலை 5 மணி வரை தேடினர். அப்போதும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது. 2 நாட்கள் தேடியும் தினேஷ்குமாரை கண்டுபிடிக்க முடியாததால் அவரது உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
    Next Story
    ×